பங்குச் சந்தைகளின் ஏற்றம் தொடருமா? பங்குச் சந்தை நிபுணர்கள் கருத்து

 

பங்குச் சந்தைகளின் ஏற்றம் தொடருமா? பங்குச் சந்தை நிபுணர்கள் கருத்து

கடந்த சில வாரங்களாக பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏறுமுகத்தில் உள்ளன. வரும் வாரத்தில் பங்கு வர்த்தகத்தில் எவை எவை தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.

ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வு கூட்டம் இந்த வாரம் நடைபெற உள்ளது. டிசம்பர் 4ம் தேதியன்று நிதிக்கொள்கை ஆய்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அறிவிக்கப்படும். ரிசர்வ் வங்கி முக்கிய கடனுக்கான வட்டி விகிதத்தை தொடர்ந்து 4 சதவீதமாக வைத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் மாதத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துள்ளது. குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் கொரோனா வைரஸ் 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. அதேசமயம் நம் நாட்டில் கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் விகிதம் 98.7 சதவீதம் என்ற அளவில் உள்ளது. அதேசமயம் கொரோனா இறப்பு விகிதம் குறைந்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தடுப்பூசி தொடர்பாக சாதகமான தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.

பங்குச் சந்தைகளின் ஏற்றம் தொடருமா? பங்குச் சந்தை நிபுணர்கள் கருத்து
இந்திய ரிசர்வ் வங்கி

பர்ஜர் கிங் நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு டிசம்பர் 2ம் தேதி தொடங்கி 4ம் தேதி முடிவடைகிறது. 2020 நவம்பர் மாத வாகன விற்பனை தொடர்பான புள்ளிவிவரத்தை மாருதி, அசோக் லேலண்ட், எய்ஷர் மோட்டார்ஸ் மற்றும் ஹீரோமோட்டோகார்ப் உள்பட பல முன்னணி வாகன நிறுவனங்கள் இந்த வாரம் வெளியிடும். இந்த மாதத்தில் சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் நல்ல ஏற்றம் கண்டுள்ளது. இந்நிலையில் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் மற்றும் கூட்டணி அமைப்பின் (ஓபெக்) 2 நாள் இன்று தொடங்குகிறது. அந்த கூட்டத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பங்குச் சந்தைகளின் ஏற்றம் தொடருமா? பங்குச் சந்தை நிபுணர்கள் கருத்து
கச்சா எண்ணெய்

இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் இந்த மாதத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வரையிலான காலத்தில் ரூ.65,300 கோடிக்கு (நிகர) பங்குகளை வாங்கி உள்ளனர். சென்செக்ஸ் வளர்ச்சியில் அன்னிய முதலீட்டாளர்கள் பங்களிப்பு முக்கியமானது. இதுதவிர சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்களது முக்கிய பொருளாதாரம் தொடர்பான புள்ளிவிவரங்களை வரும் நாட்களில் வெளியிடும். மேலும் சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்களும் இந்த வாரம் பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தை முடிவு என்று பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.