சென்னையில் நேற்று ஒரே நாளில் 2,000 வாகனங்கள் பறிமுதல்.. மாஸ்க் அணியாமல் சென்றவர்கள் மீதும் வழக்குப்பதிவு!

 

சென்னையில் நேற்று ஒரே நாளில் 2,000 வாகனங்கள் பறிமுதல்.. மாஸ்க் அணியாமல் சென்றவர்கள் மீதும் வழக்குப்பதிவு!

தமிழகத்தில் கொரோனா அதிவேகமாகப் பரவி வரும் நிலையில், சென்னையில் மட்டுமே 38 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெருமளவு கொரோனா பரவியதற்குக் காரணம், ஊரடங்கில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டது தான் என்று கூறப்படுகிறது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த நேற்று முதல் ஜூன் 30 வரை சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடுமையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

சென்னையில் நேற்று ஒரே நாளில் 2,000 வாகனங்கள் பறிமுதல்.. மாஸ்க் அணியாமல் சென்றவர்கள் மீதும் வழக்குப்பதிவு!

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதும் போடப்பட்ட முதற்கட்ட ஊரடங்கைப் போன்று, 4 மாவட்டங்களில் கடுமையான வாகன சோதனை செய்யப்பட்டு வருகிறது. இ-பாஸ் இல்லாமலும், தேவையில்லாமல் வெளியே வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டும் பறிமுதல் செய்யப்பட்டும் வருகின்றன. அதே போலச் சென்னையிலும் 200க்கும் மேற்பட்ட இடங்களில் வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, கடுமையாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமில்லாமல் ட்ரோன் கேமராக்களும் களமிறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் விதிகளை மீறி வெளியே சென்ற 2,346 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் 2,000 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வட சென்னையில் பகுதியில் தான் அதிக அளவு வழக்குப்பதிவாகி இருப்பதாகவும் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்திருக்கிறார். இதில் முகக்கவசம் அணியாமல் சென்ற 986 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.