20 ஆண்டுகளில் இல்லாத பாதிப்பு எதிரொலி….. ‘நோ ஒர்க் டேஸ்’ அறிவித்த வாகன தயாரிப்பு நிறுவனங்கள்

 

20 ஆண்டுகளில் இல்லாத பாதிப்பு எதிரொலி…..  ‘நோ ஒர்க் டேஸ்’ அறிவித்த வாகன தயாரிப்பு நிறுவனங்கள்

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாகன விற்பனை மோசமாக உள்ளதால், வேறு வழியில்லாமல் முதலீடு குறைப்பு, நோ ஒர்க் டேஸ் போன்ற நடவடிக்கையில் தயாரிப்பு நிறுவனங்கள் இறங்கி விட்டன.

சர்வதேச அளவில் மிகப்பெரிய வாகன சந்தையாக நம் நாடு விளங்குகிறது. அதனால்தான் பல வெளிநாட்டு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை இந்தியாவில் சந்தைப்படுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றன. ஆனால் சமீபகாலமாக இந்திய வாகன சந்தையில் நிலவரம் மோசமாக உள்ளது. குறிப்பாக இந்த ஆண்டு தொடக்கம் முதல் வாகன விற்பனை தொடர்ந்து சரிவை கண்டு வருகிறது. 

டூ வீலர் தயாரிப்பு ஆலை

வாகனங்கள் விற்பனையாகததால் நிறுவனங்களிடம் கையிருப்பு அதிகரித்து கொண்டே சென்றது. அதனால்  வாகன தயாரிப்பு நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்தன. அதேவேளையில், தொடர்ந்து விற்பனை குறைந்து கொண்டே வந்ததால் பல வாகன டீலர்கள் தங்களது நிறுவனத்தை மூடி விட்டனர். நிலைமை மோசமாகுவதை உணர்ந்த வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வேறு என்ன செய்யலாம் என யோசிக்க தொடங்கினர்.

20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாகன துறையின் நிலவரம் மோசமாக இருப்பதால், மூலதன செலவினத்தை குறைக்கும் நோக்கில், தயாரிப்பு நிறுவனங்கள் முதலீட்டை குறைக்க தொடங்கியுள்ளனர். மேலும், பணியில்லாத நாட்களையும் (நோ ஒர்க் டேஸ்)  நிறுவனங்கள் அறிவித்து விட்டன. தற்காலிக ஊழியர்களையும் வீட்டுக்கு அனுப்பி வருகின்றன.

கார் தயாரிப்பு ஆலை

நம் நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி. பார்கவா இது குறித்து கூறுகையில், மாருதி சுசுகி நிறுவனத்தில் வேலை பார்த்த சுமார் 3 ஆயிரம் தற்காலிக ஊழியர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர் என தெரிவித்தார். அதேசமயம், ஹீரோமோட்டோகார்ப், அசோக் லேலண்ட், டி.வி.எஸ். குழுமத்தின் சில நிறுவனங்கள் பணியில்லாத நாட்கள் அறிவிப்பையும் வெளியிட்டன. 

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை தனது தயாரிப்பு ஆலைகள் மூடப்படுவதாக பங்குச் சந்தை அமைப்பிடம் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.