2.0 திரை விமர்சனம்: தமிழ் சினிமாவின் அடுத்தகட்ட பாய்ச்சல்!!

 

2.0 திரை விமர்சனம்: தமிழ் சினிமாவின் அடுத்தகட்ட பாய்ச்சல்!!

ஹாலிவுட் படங்கள் என்பது மற்ற ஒட்டுமொத்த திரைத்துறையினருக்கும் எப்போதும் சவாலாகவே இருந்து வருகிறது.ஏனெனில் அவர்களின் தொழில்நுட்பமும், தரமும் பிரமிக்க வைக்கும் வகையிலேயே இருக்கும்.

ஹாலிவுட் படங்கள் என்பது மற்ற ஒட்டுமொத்த திரைத்துறைக்கும் எப்போதும் சவாலாகவே இருந்து வருகிறது.ஏனெனில் அவர்களின் தொழில்நுட்பமும், தரமும் பிரமிக்க வைக்கும் வகையிலேயே இருக்கும். உதாரணமாக அவதார் படம் ஒட்டுமொத்த உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தது என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனால் இதையெல்லாம் தாண்டி ஹாலிவுட்டிற்கே சவால் விடும் இயக்குநர்கள் நம் தமிழ் சினிமாவிலும் இருக்கிறார்கள் என்பதை 2.0 திரைப்படத்திற்குப் பிறகு இனி நாமும் பெருமையோடு சொல்லிக் கொள்ளலாம். பிரம்மாண்டத்தின் மறுபெயர் என்று சொல்லப்படும் இயக்குநர் ஷங்கர் எந்திரன் படத்திற்கு பிறகு மீண்டும் அதை ஒருமுறை நிரூபித்திருக்கிறார்.

எந்திரன் பாகம் 2 போல் இந்த படம் இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், எந்திரன் படத்தையும் மிஞ்சிய பிரம்மாண்டத்தை கொண்டுள்ளது. படம் முழுவதும் கற்பனைக்கும் எட்டாத காட்சிகள் என்பதை தாண்டி மற்ற உயிரினங்களுக்கும் சேர்த்துத்தான் இந்த உலகம் என்பதை  ஆணித்தரமாகச் சொல்லி இருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.

2.0

செல்போன்களை அதிகம் பயன்படுத்துவதால் பறவை இனங்களுக்குப் பாதிப்பு வருகிறது என பறவையியல் வல்லுநர்  அக்ஷய்குமார், செல்போன் கம்பெனிகளுக்கு குறைவான அனுமதி கொடுக்க வேண்டும் என்றும், அலைவரிசையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கிறார். ஆனால், அரசு அதை ஏற்க மறுக்கிறது. நீதிமன்றத்தை நாடி அங்கும் தோற்றுப் போகிறார். இதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறார். அதன்பின் பறவைகளின் சக்தியுடன் பறவை மனிதனாக மாறி மக்கள் பயன்படுத்தும் செல்போன்களை காணாமல் போகச் செய்கிறார். தன்னை எதிர்த்தவர்களையும் கொலை செய்கிறார். அது பற்றி கண்டுபிடிக்க அரசாங்கத்தின் வேண்டுகோளின்படி ரோபோ விஞ்ஞானி ரஜினிகாந்த், சிட்டி ரோபோவின் 2.0 வெர்ஷனை உருவாக்குகிறார். சிட்டி, பறவை மனிதனை அழித்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

கண்களை விரிவடைய செய்யும் திரைக்கதை , எப்படி இப்படியெல்லாம் செய்தார்கள் என வியக்க வைக்கும் விஎப்ஃஎக்ஸ் காட்சிகள் என நம்மை வேறு உலகிற்கு அழைத்து சென்றுள்ளனர். இந்தப் படத்தைப் பார்த்தால் 3டியில் மட்டுமே பார்க்க வேண்டும்.அப்போது தான்  அந்த அளவுக்கு இப்படத்திற்காகப் படக்குழுவினர் எவ்வளவு உழைத்திருக்கிறார்கள் என்பதை நம்மால் உணரமுடியும்.

2.0

ரஜினிகாந்தை பொறுத்தவரையில் இந்த படம் அவரது ரசிகர்களுக்கு ஒரு விருந்து தான். அந்த அளவிற்கு ரஜினியின் நடை, உடை பாவனை அனைத்தும் மாஸாக இருக்கிறது. படத்தில் ரோபோட்டாக வரும் எமி ஜாக்சன், இவரை தவிர  இந்தக் கதாபாத்திரத்தில் வேறு யாரும் சிறப்பாக செய்திருக்க முடியாது என்ற எண்ணத்தை நமக்குள் வர வைக்கிறார்.  படத்தின் வில்லனாக தோன்றும் அக்ஷய்குமார் முதலில், வயதான பறவையியல் வல்லுநர், மீண்டும் உயிர்ப்பிக்கும் பறவை மனிதன் என நடிப்பில் மிரள வைக்கிறார்.

2.0 akshay

ஏ.ஆர். ரஹ்மான்  பின்னணி இசையில் திரைக்கதை கூடுதலாக பிரமிப்பூட்டுகிறது. நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு, ஆண்டனியின் படத் தொகுப்பு, முத்துராஜின் அரங்க அமைப்பு மற்றும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்கள் பணியை சிறப்பாக செய்துள்ளனர். குறிப்பாக விஎப்ஃஎக்ஸ் பணியை செய்தவர்கள் ஒரு தமிழ்ப் படத்தை ஹாலிவுட்டை மிஞ்சும் அளவிற்கு தங்கள் உழைப்பை கொட்டியுள்ளனர்.

கதையின் கருவில் முக்கிய கருத்து பெரிதாக புலன்படவில்லை என்றாலும், ஒட்டுமொத்தமாக  உலக அளவில் தமிழ் சினிமாவை தலைநிமிர வைக்கும் படமாக 2.0 இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

2.0 – தமிழ் சினிமாவின் புதிய அடையாளம்