2 ஆயிரம் ரூபாய் நோட்டு புழக்கம் குறைந்து போச்சாம்….. ரிசர்வ் வங்கி தகவல்….

 

2 ஆயிரம் ரூபாய் நோட்டு புழக்கம் குறைந்து போச்சாம்….. ரிசர்வ் வங்கி தகவல்….

கடந்த 2018-19ம் நிதியாண்டில் புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 7.2 கோடி குறைந்து விட்டதாம். கடந்த மார்ச் இறுதி நிலவரப்படி 329 கோடி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் இருந்தது என ரிசர்வ் வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2016 நவம்பர் மாதத்தில், பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு திடீரென தடை செய்தது. கருப்பு பணம், ஊழல் மற்றும் போலி ரூபாய் நோட்டுகளை ஒழிக்கும் அந்த நடவடிக்கைகளை பிரதமர் மோடி எடுத்தார். மேலும், மக்கள் தங்கள் கைவசம் இருக்கும் பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றி கொள்ளலாம் எனவும் மத்திய அரசு அறிவித்தது.

பழைய 500,1,000 ரூபாய் நோட்டுகள்

செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளுக்கு புதிய 2 ஆயிரம் நோட்டுகள் அதிகளவில் வழங்கப்பட்டது. 2017 மார்ச் மாதத்துக்குள் தடை செய்யப்பட்ட பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட்டது. அப்போது புழக்கத்தில் இருந்து அனைத்து ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் மதிப்பு மட்டும் 50 சதவீதத்துக்கு மேல் இருந்தது.

ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டை மாற்றுவதில் சாமானிய மக்கள் கடும் சிரமப்பட்டனர். மேலும், ரூ.2 ஆயிரம் நோட்டுகளுக்கு பதிலாக குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை வழங்குமாறு அனைத்து தரப்பினரும் அரசிடம் கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையே புதிய 500 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு புழக்கத்தில் விட்டது. இதனால் மக்கள் ஒரளவு சமாதானம் அடைந்தனர்.

புதிய ரூ.500

ரிசர்வ் வங்கி தற்போது ரூ.2 ஆயிரம் நோட்டு அச்சடிப்பை படிப்படியாக குறைத்து விட்டது. இதனையடுத்து அதற்கு அடுத்த ஆண்டில் புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளில் ரூ.2 ஆயிரம் நோட்டுகளின் பங்கு 37 சதவீதமாக குறைந்தது. தற்போது அது 31 சதவீதமாக சரிந்து விட்டது.

அதேசமயம், புழக்கத்தில் மற்ற ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. தற்போது ஒட்டு மொத்த அளவில் ரூ.21.1 லட்சம் கோடி மதிப்புக்கு அனைத்து மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. இதில் ரூ.500 நோட்டுகளின் பங்கு மட்டும் 51 சதவீதமாக உள்ளது. தற்போது 2,151 கோடி 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. அதேசமயம் புழக்கத்தில் உள்ள 100 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 2,007 கோடி மட்டுமே.

மற்ற ரூபாய் நோட்டுகளை காட்டிலும் ரூ.10 நோட்டுதான் அதிக எண்ணிக்கையில் புழக்கத்தில் உள்ளது. தற்போது 3,126 கோடி ரூ.10 நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.