2வது ரிக் இயந்திரம் பழுது: மீட்பு பணி தற்காலிகமாக நிறுத்தி வைப்பு!

 

2வது ரிக் இயந்திரம் பழுது: மீட்பு பணி  தற்காலிகமாக நிறுத்தி வைப்பு!

ஆழ்துளைக் கிணற்றின் அருகில் சுரங்கம்  போல குழி தோண்டப்படும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சுர்ஜித்தை மீட்கும் பணியில்  ஈடுபடுத்தப்பட்ட இரண்டாவது ரிக் இயந்திரம் பழுதாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள  நடுக்காட்டுப்பட்டியில்  சுர்ஜித் என்ற 2 வயது குழந்தை தனது வீட்டின் தோட்டத்திலிருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். கடந்த 25 ஆம் தேதி மாலை 5.40 மணிக்கு விழுந்த அந்த குழந்தையை மீட்க கடந்த 66 மணிநேரமாக மீட்பு படையினர் முயற்சி செய்து வருகின்றனர்.  தற்போது ஆழ்துளைக் கிணற்றின் அருகில் சுரங்கம்  போல குழி தோண்டப்படும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  சுர்ஜித்துக்கு நேர்ந்த இந்த அசம்பாவிதத்தால் தீபாவளி பண்டிகையே களையிழந்து காணப்படுகிறது. ஒட்டுமொத்த தமிழகமே சுர்ஜித் மீண்டு வர வேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்து கிடக்கின்றது. 

digging

ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் கொண்டு வரப்பட்டு  துரிதமாக பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அதிக திறன் கொண்ட இரண்டாவது இயந்திரம் ராமநாதபுரத்திலிருந்து கொண்டு வரப்பட்டு மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டது. இருப்பினும் பாறைகள் குறுக்கிடுவதால் பணியில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து மீட்பு படையினர் முயற்சி செய்து வருகின்றனர்.

digging

இந்நிலையில் குழி தோண்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட இரண்டாவது ரிக் இயந்திரம் பழுதாகியுள்ளது. அதில் உள்ள போல்ட்டுகள் சேதமடைந்து இருப்பதாகக் கூறப்படும் நிலையில் சுர்ஜித்தை மீட்கும் பணி  தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இருப்பினும்  இதற்கான மாற்று பாகங்கள் தயார் நிலையில் இருப்பதால் சில மணி நேரங்களில் பணி  மீண்டும் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.