கட்சி அலுவலகம்… விஜயகாந்த் பாணியில் ரஜினிகாந்த்

 

கட்சி அலுவலகம்… விஜயகாந்த் பாணியில் ரஜினிகாந்த்

தமிழகம் மட்டுமல்லாது கர்நாடகம், ஆந்திரா, புதுச்சேரியிலும் கட்சி நிறுவப்பட இருப்பதாகவும், அதனால் ரஜினி கட்சியின் பெயர் அகில இந்திய… என்று தொடங்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் ரஜனி மன்றத்தினர்.

கட்சியின் மேற்பார்வையாளர் தமிழருவி மணியனுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டிருக்கும் ரஜினி, தனது அண்ணனை சந்திப்பதற்காக பெங்களூரு செல்கிறார். அரசியலை விட தம்பியின் உடல்நிலைதான் முக்கியம் என்று சொன்னவர் அண்ணன் சத்தியநாராயணன். இந்நிலையில், அரசியல் கட்சி தொடங்குவது என்று முடிவெடுத்து விட்டதால், அதுகுறித்து அண்ணனிடம் கலந்து பேசிவிட்டு, அவரின் ஆசி வாங்கி வர பெங்களூரு செல்கிறார் ரஜினி.

கட்சி அலுவலகம்… விஜயகாந்த் பாணியில் ரஜினிகாந்த்

தான் பெங்களூரு சென்றுவிட்டு திரும்பும் வரையிலும் தமிழருவி மணியன் செய்துமுடிக்க வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைதான் இன்று நடைபெற்றுள்ளதாம்.

வரும் 31ம் தேதி கட்சி தொடங்குவது பற்றி அறிவிக்க இருப்பதால் , கட்சி கொடி, கட்சி சின்னம் குறித்த ஆலோசனையில் ராகவேந்திரா மண்டபம் பரபரப்பாக இருக்கிறது என்கிறார்கள்.

கட்சி அலுவலகம்… விஜயகாந்த் பாணியில் ரஜினிகாந்த்

தற்போது ரஜினி மன்றத்தினர், நீலம்- வெள்ளை – சிகப்பு வண்ண கொடியின் நடுவில் ஸ்டார் வைத்த கொடியினை பயன்படுத்துகிறார்கள். கட்சி வேறு, ஆட்சி வேறு என்ற கொள்கையில் இருப்பதால், முதல்வர் வேட்பாளர் தான் இல்லை என்பதில் உறுதியாக இருப்பதால், கட்சியின் கொடியில் ரஜினியின் படம் இடம்பெறாது என்று சொல்லும் ராகவேந்திரா மண்டபத்து வட்டாரம், பாபா முத்திரை கட்சியின் கொடியில் இடம்பெற வாய்ப்பிகிறது என்கிறது.

கட்சிக்கென தனிஅலுவலகம் வேண்டுமே என்று யோசித்த ரஜினி, ராகவேந்திரா மண்டபத்தையே கட்சியின் அலுவலகமாக மாற்றுமாறு சொல்லிவிட்டாராம்.

விஜயகாந்த் பாணியில் திருமண மண்டபத்தை அரசியல் கட்சி அலுவலகமாக மாற்றி வரும் ரஜினிகாந்த், தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜூன மூர்த்திக்கும், மேற்பார்வையாளர் தமிழருவி மணியனுக்கும் தனித்தனி அறைகள் தயார் செய்யும்படியும் உத்தரவிட்டிருக்கிறாராம் ரஜினி.