18 எம்.எல்.ஏக்களின் அறைகளுக்கு சீல்

 

18 எம்.எல்.ஏக்களின் அறைகளுக்கு சீல்

எம்.எல்.ஏக்கள் விடுதியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் வெளியேற வேண்டும் என்ற சபாநாயகரின் உத்தரவையடுத்து அவர்களது அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

சென்னை: எம்.எல்.ஏக்கள் விடுதியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் வெளியேற வேண்டும் என்ற சபாநாயகரின் உத்தரவையடுத்து அவர்களது அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் பிறப்பித்த உத்தரவு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் கடந்த வாரத்தில் தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து, தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 பேருக்கும் சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன், நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

அதில், எம்எல்ஏ-க்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் உத்தரவிட்ட நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான சலுகைகளைப் பெற தகுதியை இழந்துவிட்டதாகவும், எனவே எம்எல்ஏ-க்கள் தங்கும் விடுதியிலும் தங்குவதற்கு அனுமதியில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே எம்.எல்.ஏக்கள் தங்கள் அறைகளை காலி செய்ய வேண்டும் எனவும் சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தகுதிநீக்கம் செய்யப்பட்டும் எம்எல்ஏ-க்கள் விடுதியை காலிசெய்யாததால், சபாநாயகரின் உத்தரவின்பேரில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு பூட்டி சீல்வைக்கப்பட்டுள்ளதாகவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி எனவே, விடுதி நிர்வாகத்துக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து, கீழ்நிலை செயலாளர் முன்னிலையில் தங்களது பொருட்களை எடுத்துச் செல்லுமாறும் நிலுவையில் உள்ள வாடகையை உடனடியாக செலுத்துமாறும் அந்தக் கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.