18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு: தீர்ப்புக்கு பின் என்ன நடக்கும்? ஆட்சி கவிழுமா?

 

18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு: தீர்ப்புக்கு பின் என்ன நடக்கும்? ஆட்சி கவிழுமா?

டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது

சென்னை: டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை எனக் கூறி ஆளுநரிடம் கடிதம் அளித்த டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில், அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்புகளை கடந்த ஜூன் 14-ம் தேதி வழங்கினர்.

இதையடுத்து, இந்த வழக்கானது மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்கு சென்றது. உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் மூன்றாவது நீதிபதியாக நியமணம் செய்யப்பட்ட சத்யநாராயணன் முன்பு நடைபெற்று வந்த இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வழக்கின் தீர்ப்பு தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுதியுள்ளது. தீர்ப்புக்கு பின்னர் அரசியல் காய் நகர்த்தல்கள் எவ்வாறு இருக்கும், என்ன மாதிரியான மாற்றங்கள் நிகழும் என தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

ஆட்சி கவிழுமா?

மொத்தம் 234 உறுப்பினர்களை கொண்ட தமிழக சட்டப்பேரவையில் திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகள் காலியாக உள்ளதால், தற்போது 232 உறுப்பினர்களே உள்ளனர். அதில், சபாநாயகர் தனபாலை தவிர்த்து அதிமுக-வுக்கு 109 எம்எல்ஏ-க்கள் உள்ளனர். ஆர்.கே.நகர் எம்எல்ஏ டிடிவி தினகரனையும் சேர்த்து அவரது அணியில் 4 எம்எல்ஏ-க்கள் உள்ளனர். இவர்கள் தவிர தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18  எம்எல்ஏ-க்கள் உள்ளனர். அதேபோல், இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருணாஸ், தமீமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் என்னமாதிரியான நிலைப்பாட்டை எடுப்பார்கள் என தெரியாது.

எனவே, தகுதி நீக்கம் செல்லாது என தீர்ப்பு வந்தால், 232 உறுப்பினர்களைக் கொண்டதாக சட்டப்பேரவை இருக்கும். அப்போது பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கை 117-ஆக மாறும். இதனால் 109 எம்எல்ஏ-க்கள் மட்டுமே வைத்திருக்கும் அதிமுக ஆட்சிக்கு பாதிப்பு ஏற்பட கூடும்.

அதேசமயம், தகுதி செல்லும் என தீர்ப்பு வந்தால், 214 உறுப்பினர்களைக் கொண்டதாக சட்டப்பேரவை இருக்கும். அப்போது பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கை 108 ஆக இருக்கும். இதனால் 109 எம்எல்ஏ-க்களை வைத்திருக்கு அதிமுக ஆட்சிக்கு பாதிப்பு ஏற்படாது.

தீர்ப்புக்கு பின் என்ன நடக்கும்?

**18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செல்லாது என்று உயர்நீதிமன்றம்  தீர்ப்பு அளித்தால் ,18 பேரும் மீண்டும் சட்டமன்றத்திற்குள் நுழைந்து, நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு முயற்சிக்கலாம்.

**தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யலாம். இடைக்கால தடை பெற்றலாம். அப்படி பெற்றால் தற்போதைய நிலையே தொடரும். வழக்கு உயர் நீதிமன்றத்திலிருந்து, உச்ச நீதிமன்றத்திற்கும் மாறக் கூடும்.

**தீர்ப்பை வைத்து அதிமுக தலைமையை தன் பக்கம் மாற்ற தினகரன் முயற்சிக்கலாம்

**தகுதி நீக்கம் செல்லும் என உயர் நீதிமன்றம் அறிவித்தால், தீர்ப்பை எதிர்த்து 18 எம்எல்ஏ-க்களும் மேல்முறையீட்டுக்கு செல்லலாம். அப்படி சென்றால் இதே நிலையே தொடரும். இல்லையெனில், 18 தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறலாம்.