துரைமுருகனின் மாஸ்(க்) காமெடி!

 

துரைமுருகனின் மாஸ்(க்) காமெடி!

எதைப்பற்றியும் கவலைப்படாமல் பேசிவிட்டு அப்புறமாக கட்சி தலைமை கடுப்பானது தெரிந்ததும், கவலைப்பட்டு சமாளிப்பது துரைமுருகனின் வழக்கம். பொதுவாகவே கட்சி மேடைகளிலும் சட்டசபையிலும், ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கும்போதும் தனது உடல்மொழிகளால் பலரையும் ரசிக்க வைப்பார் துரைமுருகன். அதைப்பற்றிய விமர்சனங்கள் எழுந்தாலும் என் உடல் நிலை அப்படி என்பார். அதுதாம் உண்மையும் கூட என்று உடன்பிறப்புகள் சொல்வதுண்டு.

அதே மாதிரி, அவரது பேச்சின் ஸ்டைலால் சீரியசான விசயங்களும் கூட சில நேரங்களில் சிரிப்பை வரவழைத்துவிடும். இப்படி பல காமெடிகளை துரைமுருகன் நிகழ்த்தி இருந்தாலும் நேற்று செய்த காமெடிதான் மாஸ் காமெடி. அதுவும் ஒரு மாஸ்க்கை மையப்படுத்திய காமெடி.

துரைமுருகனின் மாஸ்(க்) காமெடி!

எவன் எவன் என்று கூட்டணிக்கட்சியினரை, ஒருமையில் பேசிய விவகாரம் கட்சி தலைமயை கேட்டு கூட்டணி கட்சிகள் கொந்தளித்ததோ இல்லையோ, தலைவர் ஸ்டாலின் செம சூடாகிவிட்டாராம். அதையும் இதையும் சொல்லி பொதுச்செயலாளர் பதவியை வாங்கியது பெரிசில்ல. அதுக்கேத்த மாதிரி பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டாமா என்று கட்சியினரிடையே ஸ்டாலின் கடுப்பாக பேசியது, துரைமுருகன் காதுக்கு வந்து, அப்செட்டில் இருந்திருக்கிறார்.

அந்த நேரம் பார்த்து, ஒருமையில் பேசிய விவகாரம் குறித்து கேட்டதால், ’’வேலூரில் நடந்த கிராம சபைக் கூட்டத்தின் முடிவில், பத்திரிகையாளர் சந்திப்பின்போது, என்னை சந்தித்த செய்தியாளர்கள், தி.மு.க. கூட்டணியில் யார், யார் இருப்பார்கள்? என்று ஒரு கேள்வி கேட்டார்கள். அதற்கு, இப்பொழுது எதையும் அறுதியிட்டு, இறுதியிட்டு சொல்ல முடியாது. தேர்தல் காலங்களில் இறுதி நேரத்தில்கூட, கட்சிகள் இடம் மாறுவது உண்டு. அப்படி, இங்கே இருப்பவர்கள் அங்கே போவதும், அங்கே இருப்பவர்கள் இங்கே வருவதுங்கூட கடந்த காலங்களில் நடைபெற்றிருக்கிறது என்றுதான் நான் கூறினேன்.

துரைமுருகனின் மாஸ்(க்) காமெடி!

வாயில், ‘மாஸ்க்’ அணிந்து பேசிக் கொண்டிருந்த காரணத்தால், சில வார்த்தைகள் தவறுதலாக வந்திருக்கலாம். அதனை நான் ஒருமையில் பேசியதாக சில பத்திரிகைகள் வெளியிட்டிருப்பதாகவும், அதனால், எங்களிடத்தில் ஆழ்ந்த உறவோடு இருக்கக்கூடிய சிலர் வருத்தம் அடைந்திருப்பதாகவும் எனக்கு செய்திகள் வந்தது. நான் அவ்வாறு கூறவில்லை. அப்படி நான் கூறியதாக எடுத்துக் கொண்டாலும், அதற்காக நான் மெத்த வருத்தப்படுகிறேன்’’என்றார்.

“கூட்டணியில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படலாம். அப்போதுதான் எவன் எவன் எங்கிருக்கிறான் என தெரிய வரும்” என கனீர் என்று பேசிவிட்டு, மாஸ்க் மேல் பழியைப்போடும் துரைமுகனின் இந்தச்செயலை கட்சியினரே, ‘’எதுக்கு இப்படி உளறணும். அப்புறம் இப்படி சமாளிக்கணும்’’என்று கேட்கிறார்கள்.

துரைமுருகனின் மாஸ்(க்) காமெடி!

மாஸ்க் மீது பழியைப்போட்டு கூட்டணியினரை சமாதானப்படுத்திய துரைமுருகன், ’’ நான் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு, எனது பேச்சு மற்றும் நடவடிக்கைகளை மாற்றிக் கொண்டிருக்கிறேன். எனவே, யாருடைய உள்ளமாவது வருத்தப்பட்டிருந்தால், அதற்காக நான், மிகவும் வருத்தப்படுகிறேன். இனி இப்படி நிகழா வண்ணம் நானும் நடந்து கொள்வேன்” என்று சொல்லி ஸ்டாலினை சமாதானப்படு்த்தவும் முயற்சித்திருக்கிறார்.