குழந்தை இருக்கும் வீடுகளில் அவசரகால நிதி!

 

குழந்தை இருக்கும் வீடுகளில் அவசரகால நிதி!

வீடுகளில் அவசர செலவுகளுக்கு என எப்போதும் சிறு தொகையை வைத்திருப்பது பெரும்பாலனவர்களுக்கு பழக்கமானதுதான். வருவாய் குறைந்த பிரிவினருக்கு இது சாத்தியமில்லை என்றாலும், குழந்தைகள் இருக்கும் வீடுகள் என்றால் அனைவருமே சிறு தொகையை கையிருப்பாக வைத்துக் கொள்வது அவசியம் என்கின்றனர் நிதி ஆலோசகர்கள்.

இந்த கொரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாத நிலையில், தனியார் மருத்துவமனைகளுக்கு அலைய வேண்டிய நிலை வரலாம். அதற்கேற்ப நிதி ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.

குழந்தை இருக்கும் வீடுகளில் அவசரகால நிதி!

சிறு குழந்தைகள் என்றால், நாப்கின் போன்றவற்றை வாங்குவதற்கு அடிக்கடி செலவு செய்ய வேண்டியிருக்கும். குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் வயிற்றுப் பிரச்னைகள், சின்ன சின்ன காய்ச்சல்கள் போன்றவற்றுக்கு உடனடியாக மருத்துவமனை செல்ல வேண்டியிருக்கும். அந்த நேரத்தில் வங்கியில் இருந்து பணம் எடுத்து வருகிறேன் என அலையக்கூடாது.

பெண் குழந்தை பிறந்த உடனேயே பலரும் அவர்களின் எதிர்கால தேவைக்காக செல்வ மகள் சேமிப்புத் திட்டம் உள்ளிட்டவற்றில் சேமிக்கத் தொடங்குகின்றனர். அதேபோன்ற பழக்கம் ஆண்குழந்தை பிறந்தாலும் இருக்க வேண்டும்.

போட்டிகள் நிறைந்த உலகத்தில் நமது குழந்தைகளும் முன்னணியில் இருக்க வேண்டும் என்றால் ஆண், பெண் என பேதம் பார்க்காமல் அவர்களுக்கு என சேமிக்கத் தொடங்க வேண்டும்.


கல்விச் செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகள் தொடங்கியதும் சிறு சிறு செலவுகள் வந்து நிற்கும். அதை சமாளிக்க இப்போதே திட்டமிட வேண்டும்.

குறிப்பாக, செலவுகள் அதிகரிக்கிறது என்பதால், அவர்களின் தனித்திறமைகளை ஊக்குவிக்காமல் இருக்கக் கூடாது. குழந்தைகளிடம் தனித்திறமை தெரிய வரும்போது அதற்கென செலவிடுவதே சரியானது. செஸ், பேட்மின்டன், கிரிக்கெட், அபாகஸ், கணினி பயிற்சிகள் என பல தனித்திறன் வளர்ப்பு நடவடிக்கைகளுக்கு பெற்றோர் முக்கியத்துவம் தர வேண்டும்.

குழந்தை பிறந்தவுடன் இதற்கென சிறு தொகையை ஒதுக்க வேண்டும் என்பதுடன், வாய்ப்பிருந்தால் அதற்காக ஒதுக்கும் தொகையை அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

அவசர கால நிதியை செலவு செய்த பின்னர், மீண்டும் அதே அளவும் நிதியை கையில் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். எந்த சூழலிலும் குழந்தைகள், பள்ளிப் பிள்ளைகள் இருக்கும் வீடுகளில் இந்த நிதித் திட்டமிடலை கைவிடக்கூடாது என்பதே நிதி ஆலோசகர்கள் கூறும் கருத்தாகும்.

  • அ. ஷாலினி