ஸ்ரீ அனுமனுக்கு பிடித்தது வடை மாலையா ? ஜாங்கிரி மாலையா?

 

ஸ்ரீ அனுமனுக்கு பிடித்தது வடை மாலையா ?  ஜாங்கிரி மாலையா?

புரட்டாசி மாதம் என்றாலே ஸ்ரீஅனுமனை வழிபடும் அன்பர்களுக்கு கொண்டாட்டமாகும். கல்வியில் சிறக்க வேண்டும் என்பவர்கள், நல்ல வேலை கிடைக்க வேண்டும் என மனமுறுக வேண்டுபவர்களுக்கு ராம பக்தன் அள்ளி அருளும் மாதம் புரட்டாசி மாதம்.

வெண்ணையும், துளசியும் விரும்பி அணியும் ஸ்ரீராம பக்தனுக்கு பிடித்த நைவேதியம் என்னவோ மிளகு வடையும், ஜாங்கிரியும்தான். இனிப்பும் காரமும் அவன் விரும்பி உண்ணும் உணவானது.

ஸ்ரீ அனுமனுக்கு பிடித்தது வடை மாலையா ?  ஜாங்கிரி மாலையா?

ஸ்ரீஆஞ்சநேயருக்கு மிளகு வடை மாலை அணிவிப்பது, அந்த காலம் தொட்டே இருந்து வருகிறது. மெலிசான, மிருதுவான மிளகு வடைகள் யாருக்குத்தான் பிடிக்காது.

தென்னிந்தியாவில் அனுமனுக்கு காரமான மிளகு வடை மாலை சாற்றுகிறார்கள் என்றால், வட இந்தியாவிலோ மிருதுவான, இனிப்பான ஜாங்கிரி மாலை சாற்றுகிறார்கள்.

ஸ்ரீ அனுமனுக்கு பிடித்தது வடை மாலையா ?  ஜாங்கிரி மாலையா?

ஒரே ஆண்டவனுக்கு ஏன் இரண்டு விதமான நைவேதியங்கள் என்று ஆராய்ந்தால் , நம் முன்னோர்கள் உருவாக்கியுள்ள காரண காரியங்கள் புலப்படும்.

அனுமனுக்கும் ராகு பகவானுக்கு நடந்த போட்டா போட்டியில், அனுமன் வெற்றி பெற்று விடுகிறார். இதையடுத்து அனுமனுக்கு ஒரு வரம் அளிக்கிறார் ராகு பகவான்.

அதாவது, தனக்கு மிகவும் பிடித்த தானியமான உளுந்தால் உணவுப் பண்டம் தயாரித்து அனுமனை வணங்கினால், அவரை எந்தக் காலத்திலும் தான் பீடிப்பதில்லை என ராகு பகவான் வாக்குறுதி அளிக்கிறார். தன்னால் வரும் தோஷங்களும் நீங்கும் என்கிறார் ராகு பகவான். இதையடுத்துதான், ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டவர் உளுந்து தானியத்தால் ஆன மாலைகளை அனுமனுக்கு சார்த்துவது சாத்திரமானது.

தென்னிந்தியாவில் உளுந்துடன் உப்பும், மிளகும் கலந்து வடை தயாரித்து மாலையாகத் சார்த்தி வழிபடுகிறார்கள்.

வட இந்தியாவில், இனிப்புப் பண்டங்கள் அதிகம் விரும்பிச் சாப்பிடப்படுவதால், உளுந்துடன் சர்க்கரை சேர்த்து ஜாங்கிரி மாலையாக அனுமனுக்கு சார்த்தி வழிபடுகிறார்கள்.

ராகு பகவான் கொடுத்த வாக்குபடி, அனுமனுக்கு உளுந்து மாலைகள் சார்த்தினால் ராகு தோஷம் நீங்குகிறது என்பது நம்பிக்கை. அதனால்தான், உளுந்து தானியத்தால் ஆன, வடையும், ஜாங்கிரியும் அனுமன் சந்நதிக்கு ஆனது என பெயர் பெற்றது.