1200 புலம்பெயர்ந்தோருடன் ஜார்கண்ட் மாநிலத்திற்கு சென்ற முதல் சிறப்பு ரெயில்

 

1200 புலம்பெயர்ந்தோருடன் ஜார்கண்ட் மாநிலத்திற்கு சென்ற முதல் சிறப்பு ரெயில்

1200 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் ஜார்கண்ட் மாநிலத்திற்கு முதன்முறையாக சிறப்பு ரெயில் சென்றது.

லிங்கம்பள்ளி: 1200 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் ஜார்கண்ட் மாநிலத்திற்கு முதன்முறையாக சிறப்பு ரெயில் சென்றது.

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக இந்தியா முழுவதும் ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தெலுங்கானாவில் உள்ள லிங்கம்பள்ளியில் இருந்து ஜார்கண்டில் உள்ள ஹதியாவுக்கு 1,200 புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றிச்செல்ல ரெயில்வே தனது முதல் சிறப்பு ரயிலை வெள்ளிக்கிழமை இயக்கியது.

மார்ச் 25 ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதிலிருந்து நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் சிக்கித் தவித்தனர். பலர் வீட்டிற்கு நடந்து செல்ல முயன்றனர். இதையடுத்து புலம்பெயர்ந்தோரை மீண்டும் பேருந்துகளில் கொண்டு செல்ல உள்துறை அமைச்சகம் மாநிலங்களுக்கு அனுமதி வழங்கியது. மேலும் புலம்பெயர்ந்தோர் தங்கள் ஊருக்கு செல்ல சிறப்பு ரயில்களை இயக்க அனுமதிக்குமாறு பல மாநில முதலமைச்சர்களால் கோரப்பட்டது.

அந்த வகையில் தெலுங்கானாவில் உள்ள லிங்கம்பள்ளியில் இருந்து ஜார்கண்டில் உள்ள ஹதியாவுக்கு 1,200 புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றிச்செல்ல ரெயில்வே தனது முதல் சிறப்பு ரயிலை வெள்ளிக்கிழமை இயக்கியது. இந்த ரயில் இன்று இரவு 11 மணிக்கு ஹதியாவை அடையும். ரெயில் புறப்படும்போது அங்கிருந்த போலீசார் கைதட்டி பயணிகளை வழியனுப்பி வைத்தனர்.

இந்த சேவை ஒரு சிறப்பு ரெயில் மட்டுமே என்று டெல்லியில் ரெயில்வே அமைச்சகம் தெளிவுபடுத்தியது. மேலும் எந்தவொரு ரெயில்களும் ரெயில்வே அமைச்சகத்தின் அறிவுறுத்தல்களின்படி மற்றும் தோற்றுவிக்கப்பட்ட மற்றும் இலக்கு மாநில அரசாங்கங்களின் கோரிக்கையின் பேரில் மட்டுமே திட்டமிடப்படும் என்று கூறப்பட்டது.

ராஜஸ்தான், ஜார்க்கண்ட், பீகார், கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தரபிரதேசம், பஞ்சாப் மற்றும் தெலுங்கானா போன்ற மாநிலங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அழைத்துச் செல்ல சிறப்பு ரயில்களைக் கோரியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.