11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக குறையும் – மத்திய அரசு தகவல்

 

11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக குறையும் – மத்திய அரசு தகவல்

கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த நிதியாண்டில் (2019-20) நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 5 சதவீதம் என்ற அளவில்தான் இருக்கும் என மத்திய புள்ளியில் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் இந்த நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி குறித்த முதல்கட்ட மதிப்பீட்டை நேற்று வெளியிட்டது. அதில் 2019-20ம் நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதம் மட்டுமே வளர்ச்சி ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத குறைந்த வளர்ச்சியாகும். மேலும் கடந்த நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.8 சதவீதமாக இருந்தது.

பொருளாதாரம்

கடந்த சில ஆண்டுகளாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர் சரிவு கண்டு வருகிறது. உற்பத்தி, வேளாண், கட்டுமானம் மற்றும் மின்சாரம், எரிவாயு, மற்றும் தண்ணீர் சப்ளை உள்ளிட்ட துறைகளில் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தயாரிப்பு துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவுதான் பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

நிர்மலா சீதாராமன்

தற்போது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளதால், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அடுத்த மாதம் தாக்கல் செய்ய பட்ஜெட்டில் கூடுதலாக நிதி ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். 2025ம் ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதார பலத்தை 5 லட்சம் கோடி டாலராக அதிகரிக்கும் நோக்கில், அடுத்த ஆண்டுகளில் அடிப்படை கட்டமைப்பு பணிகளில் ரூ.102 லட்சம் கோடி முதலீடு செய்யும் திட்டத்தை கடந்த வாரம் நிர்மலா சீதாராமன் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.