100 நாட்களில் பணம் குட்டி போடும்! 100 கோடி சுருட்டிய பலே ஆசாமியின் எம்.எல்.எம் டெக்னிக்!

 

100 நாட்களில் பணம் குட்டி போடும்! 100 கோடி சுருட்டிய பலே ஆசாமியின் எம்.எல்.எம் டெக்னிக்!

தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்யும் பணத்தை சரியாக வங்கியின் 100 வேலை நாட்களில், அவரவர்களின் வங்கி கணக்கிலேயே இரட்டிப்பாக்கி செலுத்தி விடுவதாக ஆசை வார்த்தை கூறியிருக்கிறார்கள்.

ஒரு காலகட்டத்தில் தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தைகளைக் கூறி சீட்டு பிடிக்க ஆரம்பித்தார்கள். பின் ஒருவர் பின் ஒருவராக சீட்டு நிறுனங்களுக்கு மூடு விழா நடத்தி கம்பி நீட்டினார்கள். அதிக லாபத்திற்கும், வட்டிக்கும் ஆசைப்பட்டு இம்மாதிரியான நிதி நிறுவனங்களில் முதலீடு செய்தவர்களில் பெரும்பாலும் மகளின் திருமணத்திற்காக, மேற்படிப்புக்காக, வீடு வாங்குவதற்காக என்று சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் தான். பத்து, பதினைந்து வருடங்களைக் கடந்தும் இவர்களின் யாருக்கும் ஒத்தை ரூபாய் கூட திரும்ப கிடைத்ததாக வரலாறு கிடையாது. கோடிகளில் பணத்தைச் சுருட்டிய நிதிநிறுவன அதிபர்கள் எங்கேயிருக்கிறார்கள் என்பதும் யாருக்கும் தெரியாது. வழக்கு இன்று வரையிலும் நடந்துக் கொண்டிருக்கிறது.

 

ஆனாலும் குறுகிய நாட்களில் அதிக லாபம் என்கிற ஆசை வார்த்தைகளில் தூண்டிலில் வலிய சென்று சிக்கிக் கொள்ளும் மீனைப் போன்று மக்கள், கவர்ச்சிகரமான அறிவிப்புகளுக்கு மயங்கி மீண்டும் மீண்டும் இந்த மாதிரியான முதலீட்டு திட்டங்களில் போய் சிக்கிக் கொண்டு, சிறுக சிறுக சேமித்து வைத்திருக்கும் பணத்தை மொத்தமாக இழந்து நிற்கிறார்கள். அம்மாதிரியான ஒரு சம்பவம், சென்னை வளசரவாக்கத்தில் நிகழ்ந்திருக்கிறது.

Winstar agency

வளசரவாக்கத்தைச் சேர்ந்த ஏழுமலை, சித்ரா தம்பதியினர் வின்ஸ்டார் என்கிற பெயரில் அப்பகுதியில் ஒரு மார்கெட்டிங் நிறுவனத்தை துவங்கி நடத்தி வந்தார்கள். அதிக லாபம் சம்பாதிக்கும் நோக்கில், முதலீட்டாளர்களை கவர்வதற்காக கவர்ச்சி திட்டங்களை அறிவித்தார்கள். அதன் ஒரு பகுதியாக, தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்யும் பணத்தை சரியாக வங்கியின் 100 வேலை நாட்களில், அவரவர்களின் வங்கி கணக்கிலேயே இரட்டிப்பாக்கி செலுத்தி விடுவதாக ஆசை வார்த்தை கூறியிருக்கிறார்கள்.

Ezhumalai

‘சதுரங்க வேட்டை’ பட பாணியில், குறுகிய நாட்களில், நமது பணம் இரட்டிப்பாகும் என்கிற ஆசையில் விழுந்தடித்துக் கொண்டு மக்கள் முதலீடு செய்திருக்கிறார்கள். எல்லோரிடமும் வங்கி கணக்கு விபரங்களை வாங்கிக் கொண்டு, வங்கி கணக்கை சரிபார்க்க, வங்கி கணக்கில் ஒரு ரூபாய் செலுத்துவது, வரி பிடித்தம் செய்வதற்காக பான் கார்டு ஜெராக்ஸ் வாங்குவது, வீட்டின் விலாசத்திற்காக ஆதார் கார்டு ஜெராக்ஸ் வாங்குவது, ஒருவருக்கு ஒரு கணக்கு மட்டும் தான் துவங்கப்படும் என்று நாளடைவில் கெடுபிடி காட்டி நேர்மையான நிறுவனமாக காட்டிக் கொண்டிருந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. 

Team members

டிப்-டாப் என்று 30 முகவர்களை நியமித்து, முதலீட்டாளர்கள் இவர்களின் மூலமாக தான் முதலீடு செய்யமுடியும் எனக் கூறி, முகவர்களுக்கும் கமிஷன் ஆசை காட்டியிருப்பதாக கூறப்படுகிறது. அலுவலகத்திற்கு வருபவர்கள், பிரம்மாண்டமான அலுவலகம், எப்பொழுதும் டிப்-டாப்பென்று கோட் சூட்களில் இருபது, முப்பது பேர் வளைய வருவது எல்லாவற்றையும் பார்த்து, நம்பி லட்சக்கணக்கில் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். இந்நிலையில் கடந்தவாரம் ஏழுமலை, சித்ரா தம்பதியினர் இரவோடு இரவாக  நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகிவிட்டனர். முதலீடு செய்தவர்களைப் போலவே, நிறுவனம் மூடப்பட்டு விட்டதால், கோட் சூட் ஆசாமிகளும், தாங்களும் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, தலையில் கை வைத்துக் கொண்டு செய்வதறியாமல் திகைத்திருக்கிறார்கள். 

Ezhumalai

நடுத்தர வர்கத்தினர் ஒரு பக்கம் பணத்தை இழந்ததால் பரிதவிப்பு போலீஸ் நிலையங்களுக்கு படையெடுக்க, இந்த மோசடி கும்பலிடம், கருப்புபணத்தை முதலீடு செய்திருந்தவர்கள் காவல்துறையில் புகாரும் கொடுக்க முடியாமல் புலம்பி வருகின்றனர்.  போலீசாரின் விசாரணையில், இந்த நிறுவனம் கடந்த சில மாதங்களில் மட்டும் 100 கோடி ரூபாய்க்கும் மேலான  அளவிற்கு பணம் சுருட்டி உள்ளதாக அறியப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க சென்ற போது, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஏற்க மறுத்திருக்கிறார்கள். 

காவல்  துறையின் சார்பில், 25 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட மோசடி புகார்களை உள்ளூர் காவல் நிலையங்கள் விசாரிப்பதில்லை, சென்னை காவல் ஆணையரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள மத்திய குற்றபிரிவோ அல்லது பொருளாதார குற்றபிரிவு காவல்துறையினரோ தான் விசாரிக்க இயலும் என தெரிவித்திருக்கிறார்கள். 10,15 வருஷங்களுக்கு முன்பு ஏமாற்றியவர்களிடம் இருந்தே இன்னமும் பணத்தைப் பெற முடியலை… அப்படியும் பேராசையில் நம்பி விழுந்திருக்கிற ஜனங்களுக்கு எங்கே பணம் கிடைக்கப் போகுது என்று கூட்டத்தை வேடிக்கைப் பார்க்க வந்த ஒருவர் உச்சரித்த வார்த்தைகளில் அத்தனை யதார்த்தம் தெறித்தது!