பீகார் எல்லை அருகே நேபாள காவலர்கள் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி, இருவர் காயம்

 

பீகார் எல்லை அருகே நேபாள காவலர்கள் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி, இருவர் காயம்

பாட்னா: பீகார் எல்லை அருகே நேபாள காவலர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார். இருவர் படுகாயம் அடைந்தனர்.

நேபாள எல்லையை ஒட்டி அமைந்துள்ள பீகார் மாநிலத்தின் சிதாமர்கி மாவட்டத்தில் உள்ளூர் மக்களுக்கும், நேபாள எல்லை பாதுகாப்பு  படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இந்த மோதலின்போது இந்தியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இருவர் படுகாயம் அடைந்தனர். இன்று காலை 8.40 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில் துணை ராணுவத்தினர் நேபாள எல்லை பாதுகாப்பு படையினரை தொடர்பு கொண்டு இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் விகேஷ் யாதவ் என்ற 22 வயது இளைஞர் என்று கூறப்படுகிறது. அவரது அடி வயிற்றில் குண்டு பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அத்துடன் உதய் தாகூர் மற்றும் உமேஷ் ராம் ஆகிய இரு இளைஞர்கள் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். லாகன் யாதவ் என்ற இந்தியரின் மருமகளான நேபாளிப் பெண் தங்கள் பகுதிக்குள் வரக்கூடாது என்று நேபாள பாதுகாப்பு படையினர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக எழுந்த வாக்குவாதம் பின்னர் துப்பாக்கிச்சூடு சம்பவம் அளவுக்கு சென்றுள்ளது.