ஹைதராபாத் இரட்டை குண்டு வெடிப்பு வழக்கு: இருவருக்கு தூக்குத் தண்டனை

 

ஹைதராபாத் இரட்டை குண்டு வெடிப்பு வழக்கு: இருவருக்கு தூக்குத் தண்டனை

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் நிகழ்த்தப்பட்ட இரட்டை குண்டு வெடிப்பு வழக்கில் இருவருக்கு தூக்குத் தண்டனையும், ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தெலங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்த்தில் கடந்த 2007-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் லும்பினி பூங்கா மற்றும் கோகுல் சாட் உணவகம் ஆகிய இரண்டு இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்த சம்பவத்தில் 43 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சிறப்பு புலனாய்வு பிரிவு, இந்தியன் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்த, அனீக் சபிக் சையது, முகமது சாதிக், அக்பர் இஸ்மாயில் சவுத்ரி, அன்சார் அகமது பாதுஷா ஷேக், தரேக் அஞ்ஜும் ஆகிய ஐந்து பேரை கைது செய்துள்ளது.

சுமார் 11 ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கின் அணைத்து தரப்பு வாதங்களும் கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில், குற்றம் நிரூபிக்கப்பட்ட அனீக் சபிக் சையது, அக்பர் இஸ்மாயில் சவுத்ரி ஆகிய இருவருக்கு தூக்குத் தண்டனையும், தாரீக் அன்ஜுமிற்கு ஆயுள் தண்டனையும் விதித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால், முகமது சாதிக், அன்சார் அகமது பாதுஷா ஷேக் ஆகிய இருவரை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கில் ரியாஸ் பத்கல், இக்பால் பத்கல், அமீர் ராசா ஆகிய மூவர் தேடப்படும் குற்றவாளிகளாக உள்ளனர். தலைமறைவாக இருக்கும் அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டால் அவர்களுக்கு எதிராக வழக்கு விசாரணை நடைபெறும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.