ஹேங்காகும் ஸ்மார்ட் போன் : தீர்வு காணும் வழிகள்!

 

ஹேங்காகும் ஸ்மார்ட் போன் : தீர்வு காணும் வழிகள்!

ஸ்மார்ட்போன்களில் ஹேங்’ என்பது வழக்கமாக வரும் ஒரு பிரச்சினை தான். இருப்பினும் அவசரமான நேரத்தில் ஹேங் ஆவது அதிகபட்சமான எரிச்சலை உண்டாக்கும்.  இந்த பிரச்சினையிலிருந்து சமாளிப்பது என்பதை இங்கே பார்க்கலாம்.

ஸ்மார்ட் போன்களை வாங்குவதற்குக் காரணம் வாட்ஸ்-அப், ஃபேஸ்புக், ட்விட்டர், கேமரா, போட்டோ எடிட், கேம்ஸ், உள்ளிட்டவற்றை சாலியாக உபயோகப்படுத்த தான். இதையெல்லாம் பயன்படுத்தப்படும் ஒரு ஸ்மார்ட்போனின் வேகம் ஆறு மாதங்களில் குறைந்துவிடுகிறது. சில நேரங்களில் ஸ்மார்ட்போன் ஹேங் ஆவதால் தலை முடியைப் பிய்த்துக்கொள்ளும் நிலைக்கும் ஆளாகிறோம்.

 எனது தோழிகளில் ஒருவர், எப்போதும் டென்ஷனாகவே சுற்றிக்கொண்டிருப்பார். ஏனெனில், குடும்பப் பிரச்சினையை விட, அவர் பயன்படுத்திக் கொண்டிருந்த ஸ்மார்ட்போன் ஆயிரத்தெட்டு பிரச்சினைகளை அவ்வப்போது அவருக்கு கொடுத்துக் கொண்டே இருந்தது. நிறுவனத்தில் மிக முக்கியமான பொறுப்பில் இருக்கும் அவருக்கு, அடிக்கடி ஃபோன் அழைப்புகள் வந்து கொண்டே இருக்கும். ஸ்மார்ட்போன் ஹேங் ஆவதால், அவரால் அந்த அழைப்புகளுக்குப் பதில் அளிக்க முடியாமல் போகும்.  மறு அழைப்பை அவர்களுக்கு வழங்கவும் முடியாமல் தவித்துக் கொண்டிருப்பார். ஒருநாள் கோபத்தில், ஸ்மார்ட்போனை தூக்கிப் போட்டு உடைத்துவிட்டார். இப்படித்தான் நம்மில் பலருக்கும் முக்கியமான நேரத்தில் ஸ்மார்ட்போன் ஸ்லோ ஆவதால், ஹேங் ஆவதால் பிரஷர் அதிகமாகிவிடுகிறது. 

முக்கிய காரணங்கள்!

ஸ்மார்ட்போன் ஹேங்க் ஆவதற்கு முக்கியக் காரணம், அதில் ஸ்டோர் செய்யப்பட்டுள்ள ஆப்ஸ்கள். ஆப்ஸ்களை பயன்படுத்தும் போது, அவற்றின் மூலம் சேமிக்கப்படும் டேட்டாக்கள் அப்படியே மெமரியில் தேவையற்றவையாகத் தங்கிவிடுகின்றன. இவற்றை நீங்கள் செட்டிங்க்ஸில் சென்று, அங்குள்ள ஆப் செட்டிங்க்ஸில், மேனேஜ் ஆப்ஸில் சென்று டெலிட் செய்ய முடியும். அப்படிச் செய்தாலும் அவை சில மணி நேரங்களுக்குள் மீண்டும் உங்கள் போனில் வந்து தேங்கிவிடும். இந்தப் பிரச்சினையில் இருந்து நீங்கள் விடுபட வேண்டுமென்றால், உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் தேவையற்ற ஆப்ஸ்களை உடனே நீக்குங்கள். அத்துடன் ஸ்மார்ட்போனில் தன்னிச்சையாக இயங்கிக்கொண்டிருக்கும் ஆப்ஸ்களை, மேனேஜ் ஆப்ஸில் சென்று கட்டாய நிறுத்தம் ( Force stop) கொடுத்துவிடுங்கள்.

ரீசெட் செய்வது அவசியம்!

மாதத்திற்கு இரண்டு முறை உங்கள் ஸ்மார்ட்போனை ரீசெட் செய்யுங்கள். அப்படிச் செய்வதற்கு முன்னால் உங்களுக்குத் தேவையான ஆப்ஸ்களை பேக்-அப் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள். சிலர் ஆப்ஸ்கள் மற்றும் ரேம் கிளியர் போன்ற சாஃப்ட்வேர் பதிவிறக்கம் செய்து வைத்திருப்போம். ஆனால் அதன் மூலம் மேலும் ஸ்மார்ட்போன்கள் ஹேங் ஆகும். எனவே அதுபோன்ற சாஃப்ட்வேர்களை பதிவிறக்கம் செய்யும்போது, சிறந்தவற்றைத் தேர்வு செய்யவும்.

உள்ளீட்டு சேமிப்பை அதிகம் பயன்படுத்த வேண்டாம்!

சில நேரங்களில் போட்டோக்கள், வீடியோக்கள், பாடல்கள் போன்றவற்றை அதிகமாக செல்போன் மெமரியில் சேமித்து வைப்பதாலும் போன் ஹேங்க் ஆவதுண்டு. எனவே மை ஃபைல்ஸ்-க்குள் சென்று அவ்வப்போது தேவையற்ற போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை நீக்கிவிடுங்கள். உள்ளீட்டு சேமிப்பை அதிகமாகப் பயன்படுத்தும் போது, ஸ்மார்ட்போனின் வேகம் ஆட்டோமேட்டிக்காக குறையும். முக்கியமாக வாட்ஸ் அப்பில் அனுப்பும் வீடியோக்கள், படங்கள், GIF ஃபைல்கள் என அனைத்தையும் அவ்வப்போது நீக்கிவிடுங்கள். இப்படிச் செய்தால் நிச்சயமாக ஸ்மார்ட்போன் ஹேங் ஆவது குறையும்.

வைரஸ் விளையாட்டுகள் தவிர்க்க!

இதுதவிர சிலர் செல்போன்கள் வைரஸ் தாக்கி விட்டதால் வேகம் குறைந்துவிட்டதாக கூறுவதுண்டு. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் அதுபோன்ற வைரஸ்கள் உங்கள் போன்களை குறைவாகவே பாதிக்கின்றன. ஹேக்கர்கள் குறிவைப்பது உங்கள் ஸ்மார்ட்போன் வேகத்தைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல, அவர்கள் உங்களின் ஆன்லைன் பணப்பரிமாற்றம் மற்றும் உங்கள் கேமரா போன்ற ஊடுருவல்களுக்குத் தான். இருப்பினும் சில நேரங்களில், நீங்கள் இண்டர்நெட்டில் தேடுதல் நடத்திக்கொண்டிருக்கும் போது வரும், தேவையற்ற லிங்க்-ஐ கிளிக் செய்யும் போது வரும் வைரஸ் உங்கள் ஃபோனின் வேகத்தைக் குறைக்கும். எனவே நீங்கள் செல்போன் வெல்ல வேண்டுமா? கார் வெல்ல வேண்டுமா? பணம், பரிசு பெற வேண்டுமா? எனத் தோன்றும் போலியான லிங்க்-களை தவிருங்கள். இதுபோன்று சீனாவில் இருந்து சில லிங்க்குகள், சில சீன ஆப்ஸ்கள் மூலம் பகிரப்படுவதாகவும், அவற்றின் மூலம் உங்கள் அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படுவதாகவும் சில தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஆப்ஸ்களை மூடுங்கள்!

அவ்வப்போது திறக்கும் ஆப்ஸ்களை அவ்வப்போது மூடிவிடுங்கள். அவசரத்தில் மூட மறந்தால், ஸ்மார்ட்போன் ஹேங் ஆவதற்கு அதுவும் ஒரு காரணமாக அமையும். சில ஆப்ஸ்கள் நமக்கே தெரியாமல், திரைக்கு பின்னால் இயங்கிக் கொண்டிருக்கும். அதை ஸ்மார்ட்போன் சூடாவதை வைத்து கண்டுபிடிக்க முடியும். இந்த மாதிரியான விஷயங்களினாலும் ஸ்மார்ட்போன் ஹேங் ஆகும். 

ஹேங் பிரச்னைகளால், நம்மில் பெரும்பாலானவர்கள் ஸ்மார்ட்போன்களை தூக்கிப் போட்டு உடைத்துவிடுகிறோம். ஆனால் இதில் ஸ்மார்ட்போன்கள் மீது எந்த தவறும் இல்லை என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.