ஸ்விக்கி அலுவலகத்தை முற்றுகையிட்ட ஊழியர்கள்; போலீசார் தலையிட்டு பேச்சுவார்த்தை

 

ஸ்விக்கி அலுவலகத்தை முற்றுகையிட்ட ஊழியர்கள்; போலீசார் தலையிட்டு பேச்சுவார்த்தை

சென்னையில் உள்ள ஸ்விக்கி நிறுவனத்தின் நிர்வாக அலுவலகத்தை அதன் டெலிவரி ஊழியர்கள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை: சென்னையில் உள்ள ஸ்விக்கி நிறுவனத்தின் நிர்வாக அலுவலகத்தை அதன் டெலிவரி ஊழியர்கள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்விக்கி செயலியில் ஆர்டர் செய்யும் உணவு வகைகளை வீட்டுக்கே டெலிவரி செய்யும் பணியில், சென்னையில் 10 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு ஒரு ஆர்டரை டெலிவரி செய்யும்போது 40 ரூபாயும், ஒரே நேரத்தில் 2 டெலிவரி என இருந்தால் 2-வது ஆர்டருக்கு 20 ரூபாயும் ஊதியம் என உறுதியளிக்கப்பட்டிருந்தது. 

ஆனால், கடந்த ஒரு மாதமாக, இந்தக் கட்டணம் 35 ரூபாய் என்றும், இணைப்பு ஆர்டர் டெலிவரிக்கு 10 ரூபாய் என்றும் குறைக்கப்பட்டுள்ளதாக ஸ்விக்கி ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்த ஊக்கத்தொகை தற்போது நிறுத்தப் பட்டுவிட்டதாக டெலிவரி ஊழியர்கள் புகார் எழுப்புகின்றனர். 

இந்நிலையில், புதிய ஊதிய முறையை கைவிடக் கோரியும், பழையமுறையில் ஊதியம் கோரியும், 3-ஆம் நாளாக அவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, நந்தனத்தில் உள்ள ஸ்விகியின் நிர்வாக அலுவலகத்தை இன்று முற்றுகையிடத் திரண்ட அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். கோரிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக ஸ்விக்கி அலுவலர்கள் அவர்களிடம் உறுதியளித்ததையடுத்து ஸ்விக்கு ஊழியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.