ஸ்டெர்லைட் ஆய்வுக் குழுவின் அவகாசம் நீட்டிப்பு

 

ஸ்டெர்லைட் ஆய்வுக் குழுவின் அவகாசம் நீட்டிப்பு

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள குழுவின் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள குழுவின் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியதற்கு எதிராக அந்த நிறுவனம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையீடு செய்துள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது. மேலும், இக் குழு ஆய்வு செய்து ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் முடிவு எடுக்கவும் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழவின் தலைவராக மேகாலயா உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி நீதிபதி தருண் அகர்வால் நியமனம் செய்யப்பட்டார். மேலும், தருண் அகர்வால் தலைமையிலான குழு விசாரணை நடத்தி ஆறு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. இக்குழுவினர் ஸ்டெர்லைட் ஆலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவின் கால அவகாசம் வருகிற 30-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அறிக்கை சமர்பிக்க குழுவின் சார்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட பசுமை தீர்ப்பாயம், மேலும், நான்கு வாரங்களுக்கு அவகாசத்தை நீட்டித்துள்ளது. அதன்படி, வருகிற நவம்பர் 30-ம் தேதிக்குள் இக்குழுவினர் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.