ஷாஹீன் பாக் போராட்டத்தில் ஏன் ஒருத்தர் கூட இறக்கவில்லை…. மீண்டும் சர்ச்சையை கிளப்பும் பா.ஜ.க. தலைவர்….

 

ஷாஹீன் பாக் போராட்டத்தில் ஏன் ஒருத்தர் கூட இறக்கவில்லை…. மீண்டும் சர்ச்சையை கிளப்பும் பா.ஜ.க. தலைவர்….

டெல்லியில் கடும் குளிர் நிலவும் சூழ்நிலையில் ஷாஹீன் பாக் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராடுபவர்களில் ஏன் ஒருத்தர் கூட இறக்கவில்லை என மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய உள்ளார் மேற்கு வங்க பா.ஜ.க. தலைவர் திலீப் கோஷ்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து டெல்லி ஷாஹீன் பாக் பகுதியில் பெண்கள் பல வாரங்களாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வீதிகளில் பெண்கள் உட்கார்ந்து போராடுகின்றனர். இந்நிலையில் மேற்கு வங்க பா.ஜ.க. தலைவர் திலீப் கோஷ், ஷாஹீன் பாக் போராட்டத்தை சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

ஷாஹீன் பாக் போராட்டம்

கொல்கத்தாவில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது, ஷாஹீன் பாக் போராட்டம் குறித்து திலீப் கோஷ் கூறியதாவது: டெல்லியில் உடலை நடுங்க வைக்கும் குளிரில் ஒரு மாதத்துக்கும் மேலாக திறந்த வெளியில் போராடும் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட போராட்டக்காரர்களை பார்க்கும்போது நான் ஆச்சரியப்படுகிறேன். 3 ஆண்டுகளுக்கு ரூபாய் நோட்டு தடை காலத்தில் வங்கிகளில் வரிசையில் 2 முதல் 3 மணி நேரம் நின்றதற்கே பலர் உயிரை இழந்தனர்.

வங்கியில் வரிசையில் நின்ற போது ஏற்பட்ட பாதிப்பு

ஆனால் கடும் குளிர் நிலவும் போதிலும் ஷாஹீன் பாக் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நோய் நொடியில் விழவில்லை அல்லது இறக்கவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அந்த போராட்டத்தில் ஏன் ஒருவர் கூட இறக்கவில்லை. இது மிகவும் அபத்தமானது. தங்களுக்கு எதுவும் ஏற்படக் கூடாது என ஏதாவது விசேஷமான பானத்தை அவர்கள் உட்கொண்டிருக்கிறார்களா? ஆனால் மேற்கு வங்கத்தில் பயத்தின் காரணமாக சில பேர் தற்கொலை கொண்டுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார். இது மாதிரி சர்ச்சைக்குரிய வகையில் திலிப் கோஷ் பேசுவது இது முதல் முறையல்ல. சில நாட்களுக்கு முன், பொது சொத்துக்களை சேதப்படுத்துவர்களை நாய் சுடுவது மாதிரி சுட்டு தள்ள வேண்டும் என திலீப் கோஷ் தெரிவித்து இருந்தார்