ஷாக் கொடுத்த ரிசர்வ் வங்கி! சென்செக்ஸ் 71 புள்ளிகள் வீழ்ச்சி….

 

ஷாக் கொடுத்த ரிசர்வ் வங்கி! சென்செக்ஸ் 71 புள்ளிகள் வீழ்ச்சி….

இந்திய ரிசர்வ் வங்கி வட்டியை குறைக்காதது, பொருளாதார வளர்ச்சி குறித்த தனது மதிப்பீட்டை குறைத்தது போன்ற காரணங்களால் இன்று பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டது. சென்செக்ஸ் 71 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

ரிசர்வ் வங்கி இன்று கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்கும் என பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்த வேளையில், வட்டி விகிதத்தில் ரிசர்வ் வங்கி எந்தவித மாற்றங்களும் செய்யவில்லை. மேலும், இந்த நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீட்டை 5 சதவீதமாக குறைத்தது. இது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவு கண்டது.

இந்திய ரிசர்வ் வங்கி

சென்செக்ஸ் கணக்கிட உதவும் நிறுவன பங்குகளில், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஐ.டி.சி., எல் அண்டு டி மற்றும் இன்போசிஸ் உள்பட 6 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. பார்தி ஏர்டெல், டாடா ஸ்டீல், இண்டஸ்இந்த் வங்கி, ஹீரோமோட்டோகார்ப், டாடா மோட்டார்ஸ், ஸ்டேட் வங்கி மற்றும் யெஸ் பேங்க் உள்பட 24 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,129 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,350 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 194 நிறுவனங்களின் பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.153.53 லட்சம்  கோடியாக சரிந்தது.

ஏர்டெல்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 70.70 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 40,779.59 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 24.80 புள்ளிகள் சரிந்து 12,018.40 புள்ளிகளில் நிலை கொண்டது.