வேலூர் மக்களவை தேர்தல் ரத்து; தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

 

வேலூர் மக்களவை தேர்தல் ரத்து; தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் அந்த கட்சியின் பொருளாளர் துரைமுருகன் மகன், கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் என மொத்தம் 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்

வேலூர்: வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. அதன்படி, முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 10-ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகளுக்கு வருகிற 18-ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான பிரசாரம் இன்றுடன் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் அந்த கட்சியின் பொருளாளர் துரைமுருகன் மகன், கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் என மொத்தம் 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

முன்னதாக, திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வீடு, கல்லூரி மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில், கடந்த மாதம் வருமானவரித்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அதில், முக்கிய ஆவணங்களும், ரூ.10 லட்சம் ரொக்கமும் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

அதேபோல், துரைமுருகனுக்கு நெருங்கிய உறவினரும், திமுக பகுதிசெயலாளருமான பூஞ்சோலை சீனிவாசனின் சகோதரி வீட்டில் நடந்த வருமானவரிச் சோதனையிலும் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த பணம் வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக, தேர்தல் ஆணையத்துக்கு வருமானவரித்துறையினர் அறிக்கை அளித்துள்ளனர். அதனடிப்படையில், வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்வதற்கான பரிந்துரையை குடியரசுத் தலைவருக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அரசியல் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிங்க

மக்களவை தேர்தல் 2019; தமிழகம், புதுச்சேரியில் அனல் பறந்த பிரசாரம் ஓய்ந்தது!