வேலூர் தேர்தல் வழக்கு தள்ளுபடி; உயர் நீதிமன்றம் அதிரடி!

 

வேலூர் தேர்தல் வழக்கு தள்ளுபடி; உயர் நீதிமன்றம் அதிரடி!

தேர்தலை ரத்து செய்ய குடியரசுத் தலைவருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்தது. அதன் நீட்சியாக, வேலூர் மக்களவை தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது

சென்னை: வேலூர் மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்டது சரியே என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற மக்களவைக்கான இரண்டாம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இதற்கான பிரசாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

kathir anand

வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் அந்த கட்சியின் பொருளாளர் துரைமுருகன் மகன், கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் என மொத்தம் 23 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், தேர்தல் ரத்து குறித்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திமுக வேட்பாளரான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையின் அடிப்படையில், தேர்தலை ரத்து செய்ய குடியரசுத் தலைவருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்தது. அதன் நீட்சியாக, வேலூர் மக்களவை தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ac shanmugam

இதனை எதிர்த்து அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், சுயேட்சை வேட்பாளர் சுகுமாறன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு அவசர வழக்காக இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

வழக்கு விசாரணையின் போது, ஒரு கட்சியோ அல்லது வேட்பாளரோ தவறு செய்தால் தவறு செய்த வேட்பாளர் மற்றும் அவர் சார்ந்த கட்சி மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஒட்டுமொத்தமாக தேர்தலை ரத்து செய்யக்கூடாது என ஏசி சண்முகம் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, வேலூரில் தேர்தலை ரத்து செய்யக்கூடாது என்றால், பணப்பட்டுவாடாவில் ஈடுபடுபவர்களை போட்டியிட அனுமதிக்க வேண்டுமா? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த ஏசி சண்முகம் தரப்பு, தகுதிநீக்கம் தான் செய்ய சொல்கிறோம், தேர்தலை ரத்து செய்யக் கூடாது என்றது.

election commission

தொடர்ந்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், தேர்ந்தெடுக்கப்பட்டவரை தான் தகுதிநீக்க வகை செய்கிறது, வேட்பாளரை எப்படி தகுதி நீக்க முடியும் என நீத்மன்றம் கேள்வி எழுப்பியது. தேர்தல் நடத்துவதற்கான சூழல் இல்லாததால் வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தேர்தல் ஆணைய முடிவுகளை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியாது. ஓட்டுக்கு பணம் கொடுப்பது உள்ளிட்ட ஊழல் முறைகேடுகளில் ஈடுபடுவது குற்றம். வேலூர் வழக்கில் சம்பந்தப்பட்டவர் தண்டிக்கப்பட்டால் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என தேர்தல் ஆணையம் தரப்பில் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்தது சரியே என கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

இதையும் வாசிங்க

300 கொடுத்தா கேஸ், 2,000 கொடுத்தா மாஸ்; ஆண்டிபட்டி தேனியில் அதிமுகவினர் அராஜகம்?!..