வெஸ்ட் நைல் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழப்பு; கேரளாவில் சோகம்!

 

வெஸ்ட் நைல் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழப்பு; கேரளாவில் சோகம்!

கேரள மாநிலத்தில் வெஸ்ட் நைல் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் வெஸ்ட் நைல் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேற்கு நைல் காய்ச்சல் (West Nile Fever) என்பது கொசு மூலம் மனிதர்களுக்கு பரவுகின்ற வைரஸ் தொற்று ஆகும். கொசுக்களுக்கு, பாதிக்கப்பட்ட பறவைகளிடம் இருந்து இந்த வைரஸ் தோற்று பரவுகிறது.

அந்த வகையில், கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் 6 வயது சிறுவன் ஒருவன் உடல்நலம் பாதிக்கப்பட்டு கோழிக்கோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அவனை பரிசோதித்த மருத்துவர்கள், வெஸ்ட் நைல் காய்ச்சலால் அச்சிறுவன் பதிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தனர்.

அச்சிறுவனுக்கு மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து கூறிய மருத்துவர்கள், இது மிகவும் அரிதான ஒன்று. கடந்த ஆண்டில் ஒன்றிரண்டு பேர் மட்டுமே இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு இந்த நோய் பரவாது. கொசுக்கள் மூலமாக மட்டுமே பரவும். எனவே, மக்கள் தேவையில்லாமல் பீதியடைய வேண்டாம் என தெரிவித்தனர்.

இந்நிலையில், வெஸ்ட் நைல் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அச்சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். இதையடுத்து, அப்பகுதிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.