வெளிநாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்தோனேசிய தொழிலாளர்கள் மரணம்

 

வெளிநாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்தோனேசிய தொழிலாளர்கள் மரணம்

இந்தோனேசியாவின் தென் மாகாண பகுதியில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஜகர்த்தா: இந்தோனேசியாவின் தென் மாகாண பகுதியில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018-ஆம் ஆண்டில், இந்தோனேசியாவின் தென் மாகாண பகுதியில் இருந்து (கிழக்கு நுசா டென்கரா) வெளிநாடுகளுக்கு சென்ற 105 தொழிலாளர்கள் ரணமடைந்துள்ளதாக அந்நாட்டின் தொழிலாளர்கள் பாதுகாப்பு சேவை மையத்தின் தலைவர் குப்பங் சிவ்வா தெரிவித்துள்ளார்.

இடம் பெயர்ந்த பெரும்பாலான தொழிலாளர்கள் மலேசியாவில் பணியாற்றும் பொழுது மரணமடைந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், மலேசியாவில் 102 பேரும், சிங்கப்பூரில் 2 பேரும் தென் ஆப்பிரிக்காவில் ஒரு தொழிலாளியும் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

“இந்த தொழிலாளர்களில் மூவர் மட்டுமே சட்டரீதியாக சென்றுள்ளனர். மற்ற 102 பேரும் முறையற்ற வகையில் அல்லது சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்” என சிவ்வா தெரிவித்திருக்கிறார்.

2018-ல் மரணமடைந்ததாக கூறப்படும் 105 தொழிலாளர்களில் 71 பேர் ஆண்கள், 34 பேர் பெண்கள் ஆவர். இவர்கள் மோசமான உடல்நிலை காரணமாகவும் விபத்தின் காரணமாகவும் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, ஆள் கடத்தலுக்கு எதிரான வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.