வெறுப்புணர்வு பரவி கிடக்கிறது; பிரதமரின் சொந்த ஊரில் போட்டு தாக்கிய பிரியங்கா!

 

வெறுப்புணர்வு பரவி கிடக்கிறது; பிரதமரின் சொந்த ஊரில் போட்டு தாக்கிய பிரியங்கா!

காங்கிரஸ் கட்சியில் பதவி வழங்கப்பட்டதை தொடர்ந்து, பிரியங்கா காந்தி தனது முதலாவது அரசியல் பேரணியில் கலந்து கொண்டு பாஜக அரசை கடுமையாக விமர்சித்து பேசினார்

காந்திநகர்: காங்கிரஸ் கட்சியில் பதவி வழங்கப்பட்டதை தொடர்ந்து, பிரியங்கா காந்தி தனது முதலாவது அரசியல் பேரணியில் கலந்து கொண்டு பாஜக அரசை கடுமையாக விமர்சித்து பேசினார்.

பிரியங்கா காந்தி இதுவரையில் தன்னுடைய சகோதரர் ராகுல் காந்திக்காகவும், தாயார் சோனியா காந்திக்காகவும் மட்டுமே தேர்தல் சமயங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் காங்கிரஸ் பொதுச் செயலாளராக அண்மையில் பிரியங்காவை காங்கிரஸ் தலைமை நியமித்தது.

இதையடுத்து, குஜராத் மாநிலம் காந்திநகரில் இன்று நடந்த காங்கிரஸ் பேரணியில் முதன் முறையாக உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: இந்த நாடு அன்பு, இணக்கம், மற்றும் சகோதரத்துவத்தினால் உருவாக்கப்பட்டது. ஒற்றுமையும், சகோதரத்துவமும் நம்மிடம் இருக்க வேண்டும். ஆனால் நாம் இப்போது அதை இழந்துவிட்டோம். நம் நாட்டில் தற்போது மிக மோசமான விஷயங்கள் நடந்து வருகிறது.

நம்முடைய நிறுவனங்களை பாஜக அரசு அழித்துவிட்டது. வன்மத்தை விதைத்து இருக்கிறார்கள். வெறுப்பை உமிழ்கிறார்கள். இந்த நாட்டை காப்பதை விட நமக்கு வேறு வேலை இப்போது இல்லை. இதற்காக நாம் சேர்ந்து பணியாற்ற வேண்டும்.

இந்த தேர்தலில்  நீங்கள் உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க போகிறீர்கள். தேவையில்லாத பிரச்னைகளால் கவனத்தை திசை திரும்ப வேண்டாம். சிந்தித்து முடிவு செய்யுங்கள். உங்கள் வாக்கு ஒரு ஆயுதம். ஆனால் இந்த ஆயுதம்  யாருக்கும் தீங்கு விளைவிப்பது இல்லை. நீங்கள்  மட்டுமே நாட்டை பாதுகாக்க முடியும்.

இளைஞர்களுக்கு வேலை கிடைப்பது குறித்து பேச வேண்டும். பெண்கள் பாதுகாப்பு குறித்து பேச வேண்டும். விவசாயிகளுக்கு நலத்திட்டங்களை கொண்டு செல்ல வேண்டும் என்றார்.