வெங்காயம் மட்டுமல்ல தக்காளி, உருளைகிழங்கு விலையும் ஏறத்தான் செய்யும்- மத்திய அமைச்சர் தகவல்

 

வெங்காயம் மட்டுமல்ல தக்காளி, உருளைகிழங்கு விலையும் ஏறத்தான் செய்யும்- மத்திய அமைச்சர் தகவல்

ஒவ்வொரு ஆண்டும் வெங்காயம் மட்டுமல்ல தக்காளி மற்றும் உருளைகிழங்கு ஆகியவற்றின் விலை உயர்வு பிரச்சினை நாம் சந்தித்துதான் வருகிறோம் என மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் கூறினார்.

வெங்காயம் உற்பத்தி அதிகம் நடைபெறும் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கடந்த மாதம் பெய்த கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் வெங்காய சாகுபடி மற்றும் சப்ளை கடுமையாக பாதித்தது. இதனால் நாட்டின் பல பகுதிகளில் வெங்காயத்தின் விலை விறுவிறுவென ஏற்றம் கண்டது. இந்த விலை உயர்வால் வழக்கம்போல் சாமானிய மக்கள்தான் பாதிக்கப்பட்டனர்.

ராம் விலாஸ் பஸ்வான்

நாட்டின் பல பகுதிகளில் வெங்காயத்தின் தரத்தை பொறுத்து கிலோ ரூ.60 வரை விற்பனையாவதாக தகவல். இதனையடுத்து வெங்காய விலை உயர்வை தடுக்க மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: 

உருளை, தக்காளி

ஒவ்வொரு ஆண்டும் உருளை கிழங்கு, தக்காளி மற்றும் வெங்காயம் ஆகிய 3 விளைபொருட்களின் பிரச்னையை (விலை உயர்வு) நாம் சந்தித்து வருகிறோம். இந்த ஆண்டு வெங்காயம் விலை உயர்ந்துள்ளது. அரசிடம் சப்ளை செய்யும் அளவுக்கு  கையிருப்பு உள்ளது. இந்த விலை உயர்வு தற்காலிகம்தான். உள்நாட்டில் சப்ளையை அதிகரிக்க 2 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய எம்.எம்.டி.சி. நிறுவனத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர விலை உயர்வை தடுக்க ஏற்றுமதிக்கான சலுகை திரும்ப பெறப்பட்டுள்ளது மற்றும் குறைந்தபட்ச ஏற்றுமதிக்கான விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.