விஸ்வரூபம் எடுக்கும் இண்டிகோ நிறுவனர்களின் மோதல்!

 

விஸ்வரூபம் எடுக்கும் இண்டிகோ நிறுவனர்களின் மோதல்!

விமான சேவையில் ஈடுபட்டு வரும் இண்டிகோ நிறுவனத்தின் நிறுவனர்கள் இடையிலான கருத்து வேறுபாடு மேலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

2006ம் ஆண்டில் இந்திய விமான போக்குவரத்து சேவையில் இண்டிகோ நிறுவனம் களம் இறங்கியது. ராகுல் பாட்டியா மற்றும் ராகேஷ் கங்வால் என்ற இரண்டு இணைபிரியா நண்பர்கள்தான் இண்டிகோ விமான சேவையை தொடங்கினர். இண்டிகோ தொடங்கிய 2 ஆண்டுகள் கழித்துதான் உலக பொருளாதார மந்தநிலை ஏற்பட்டது. அந்த சமயத்திலும் இண்டிகோ நிறுவனம் தாக்கு பிடித்து சமாளித்து வெற்றிகரமாக விமானங்களை இயக்கியது.

2012ம் ஆண்டில் உள்நாட்டு விமான போக்குவரத்து சேவையில் முதல் இடத்தை பிடித்தது. அதேசமயம் தனது விமான சேவையை ஒரு பக்கம் விரிவுப்படுத்தி வந்தது. இந்நிலையில் 2015ம் ஆண்டில் புதிய பங்கு வெளியீட்டை இண்டிகோ மேற்கொண்டது. தற்போது இண்டிகோ நிறுவனத்தில் ராகுல் பாட்டியாவுக்கு 38.26 சதவீத பங்குகளும், ராகேஷ் கங்வாலுக்கு 36.69 சதவீத பங்குகளும் உள்ளன. இதர பங்குகள் பொதுமக்கள், நிறுவன முதலீட்டாளர்கள் வசம் உள்ளன.

ராகேஷ் கங்வால்

இந்நிலையில் ஒன்றாக இருந்த நண்பர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கத்தரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வந்துதான் ஆக வேண்டும் என்பது போல் இண்டிகோ நிறுவனர்கள் இடையே நிலவிய கருத்து வேறுபாடு சமீபத்தில் வெளியே வந்தது. நிறுவன விதிமுறைகளை மீறியதாக ராகுல் பாட்டியா மீது இண்டிகோ நிறுவனர்களின் ஒருவரான ராகேஷ் கங்வால் குற்றஞ்சாட்டினார். இதனால் இண்டிகோ நிறுவனத்தின் நிர்வாகம் மீது சந்தேக கண் விழுந்தது.

ராகுல் பாட்டியா

இதனையடுத்து இண்டிகோ நிறுவனத்தின் இயக்குனர்கள் குழுவில் மேலும் பல இயக்குனர்களை சேர்க்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. தற்போது இயக்குனர்கள் குழுவில் 6 பேர் உள்ளனர். இதற்கிடையே நண்பருடன் ஏற்பட்ட மோதலால் தன் பங்குகளை ராகேஷ் கங்வால் விற்பனை செய்ய போவதாக ஒரு செய்தி வெளியானது. ஆனால் அதனை ராகேஷ் கங்வால் மறுத்துள்ளார்.