விழாக்குழு சார்பில் மாடுபிடி வீரர்களுக்கு இன்சூரன்ஸ்: அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி

 

விழாக்குழு சார்பில் மாடுபிடி வீரர்களுக்கு இன்சூரன்ஸ்: அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி

ஜல்லிக்கட்டு போட்டிகளில் விழாக்குழு சார்பாக வீரர்களுக்கு இன்சூரன்ஸ் செய்யப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்

புதுக்கோட்டை: ஜல்லிக்கட்டு போட்டிகளில் விழாக்குழு சார்பாக வீரர்களுக்கு இன்சூரன்ஸ் செய்யப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

விலங்குகள் நல வாரியமான பீட்டா அமைப்பினர் தொடர்ந்த வழக்கில் கடந்த 2014-ஆம் ஆண்டில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதித்தது. இந்த தடை கடந்த ஆண்டும் நீடித்து வந்த நிலையில், தமிழகம் முழுவதும் மாணவர்கள் அறவழியில் போராட்டத்தை முன்னெடுத்தனர். மாணவர்களின் எழுச்சி மிகுந்த போராட்டத்தை தொடர்ந்து, அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு, ஜல்லிக்கட்டு போட்டிக்கான தடை நீங்கியது.

jallikkattu

அதனையடுத்து, மாநிலம் முழுவதும் பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் இடங்களில் அந்த போட்டிகள் விமர்சையாக கடந்த ஆண்டு நடைபெற்றது. அதேபோல், நடப்பாண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜனவரி 15-ம் தேதியும், பாலமேட்டில் ஜனவரி 16-ம் தேதியும் அலங்காநல்லூரில் ஜனவரி 17-ம் தேதியும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று தொடங்கியுள்ளது. 
 

jallikkattu 2

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு காயம் ஏற்படுவதும், சில நேரங்களில் அவர்கள் மரணிக்கும் துயரசம்பவங்களும் நடப்பதுண்டு. ஆனாலும் அவர்களுக்கு இழப்பீடு ஏதும் வழங்கபடுவதில்லை.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் முறையாக மாடுபிடி வீரர்களுக்கு காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தின் கீழ் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது. அதன்படி மாடுபிடி வீரர்கள் ரூ.12 ப்ரீமியம் செலுத்தி இரண்டு லட்ச ரூபாய்கான ஒரு வருட காப்பீடு பெற்றுக்கொள்ளலாம். வங்கிக்கு சென்று இந்த காப்பீட்டை எடுத்துக் கொள்ளலாம். 

jallikkattu 3

இதனிடையே, வரும் 20-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கின்னஸ் சாதனைக்காக நடத்தப்படும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கு, விழாக்குழு சார்பாக இன்சூரன்ஸ் செய்யப்படும். மேலும் ஜல்லிக்கட்டு போட்டி பாதுகாப்பாக நடத்தப்படும் என்றும் இனி வரும் அனைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் விழாக்குழு சார்பாக வீரர்களுக்கு இன்சூரன்ஸ் செய்யப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.