விலங்குகள் போல் குழந்தைகளை பெற்றுக் கொள்வது நாட்டுக்கு தீங்கானது…ஷியா வக்பு வாரியம் தலைவர் கருத்து….

 

விலங்குகள் போல் குழந்தைகளை பெற்றுக் கொள்வது நாட்டுக்கு தீங்கானது…ஷியா வக்பு வாரியம் தலைவர் கருத்து….

விலங்குகள் போல் குழந்தைகளை பெற்றுக் கொள்வது சமூகத்துக்கும், நாட்டுக்கும் தீங்கானது என ஷியா வக்பு வாரியத்தின் தலைவர் வாசிம் ரிஸ்வி தெரிவித்தார்.

நாட்டின் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். நாட்டின் நிலையான வளர்ச்சியை உறுதி செய்ய, இரு குழந்தைகள் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என கடந்த சில தினங்களுக்கு முன் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார். இதனை பலரும் விமர்சனம் செய்தனர். குறிப்பாக ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஓவைசி, முஸ்லிம்களின் மக்கள்தொகையை கட்டுப்படுத்துவதில் ஆர்.எஸ்.எஸ். எப்போதும் குறியாக உள்ளது என குற்றச்சாட்டினார்.

மோகன் பகவத்

இந்நிலையில், உத்தர பிரதேச ஷியா வக்பு வாரியத்தின் தலைவர் வாசிம் ரிஸ்வி மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுபடுத்துவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வாசிம் ரிஸ்வி கூறியதாவது: குழந்தை பிறப்பு இயற்கையான நடைமுறை அதில் யாரும் குறுக்கிட கூடாது என சில பேர் நினைக்கின்றனர். விலங்குகள் போல் அதிகளவில் குழந்தை பெற்றெடுத்தால் அது சமூகத்துக்கும், நாட்டுக்கும் தீங்கு விளைவிக்கும். மக்கள் தொகையை கட்டுப்படுத்த சட்டம் அமல்படுத்தினால்தான் நாட்டுக்கு நல்லது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மக்கள்தொகை பெருக்கம்

பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான கிரிராஜ் அண்மையில், நாட்டில் மக்கள்தொகையை கட்டுப்படுத்த சட்டத்தை அமல்படுத்தும் பணியை நிறைவேற்றிவிட்டால் நான் அரசியலிருந்து ஓய்வு பெற்று விடுவேன் என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. வேலைவாய்ப்பின்மை, கல்வியறிவு மற்றும் வளங்களை ஒதுக்கீடு செய்தல் உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்க்க மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கை உதவும் என பா.ஜ.க.தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.