விற்பனைக்கு வரும் ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான பங்குகள்

 

விற்பனைக்கு வரும் ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான பங்குகள்

நிறுவனங்களில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்ற பரிந்துரையால், குறைந்தபட்சம் 100 நிறுவனங்கள் சுமார் ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான பங்குகளை மக்களுக்கு விற்பனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசின் முதல் முழு மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டில், பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் பொதுமக்களின் பங்கை குறைந்தபட்சம் 35 சதவீதமாக உயர்த்த வேண்டும் என பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபிக்கு பரிந்துரை செய்யப்பட்டது. தற்போது நிறுவனங்களில் பொதுமக்களின் பங்களிப்பு 25 சதவீதமாக உள்ளது. 

நிர்மலா சீதாராமன்

பட்ஜெட் பரிந்துரையை செபி செயல்படுத்தினால் பல நிறுவனங்கள் தங்களது கையில் உள்ள கணிசமான பங்குகளை மக்களுக்கு விற்பனை செய்ய வேண்டியது இருக்கும். குறைந்தபட்சம் 100 நிறுவனங்களாவது சுமார் ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான பங்குகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டியது இருக்கும். 

பங்கு விற்பனை

உதாரணமாக  பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனத்தின் மொத்த பங்குகள் எண்ணிக்கை ஒரு லட்சம் என்று வைத்து கொள்வோம். தற்போது உள்ள விதிமுறைப்படி, மொத்த பங்குகளில் 75 ஆயிரம் பங்குகள் நிறுவனத்தின் வசமும், 25 ஆயிரம் பங்குகள் பொதுமக்களிடம் இருக்கும். ஆனால், செபி மத்திய பட்ஜெட் பரிந்துரையை செயல்படுத்தினால்  இனி நிறுவனங்கள் 10 ஆயிரம் பங்குகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். இதனையடுத்து நிறுவனத்தின் வசம் 65 ஆயிரம் பங்குகளை மட்டுமே இருக்கும். பொதுமக்களிடம் 35 ஆயிரம் பங்குகள் இருக்கும்.