விஜய் மல்லையாவுக்கு சொந்தமான பங்குகள் ரூ.1008 கோடிக்கு விற்பனை!

 

விஜய் மல்லையாவுக்கு சொந்தமான பங்குகள் ரூ.1008 கோடிக்கு விற்பனை!

இந்திய வங்கிகள் பலவற்றிலும் ரூ.9 ஆயிரம் கோடிக்கும் மேல் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாத வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையா நாட்டை விட்டு தப்பிச் சென்றார்

மும்பை: தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான பங்குகள் ரூ.1008 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அமலாகத்துறை தெரிவித்துள்ளது.

யுனைடெட் ப்ரீவரீஸ் குழுமத்தின்கீழ் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ், கிங்ஃபிஷர் மதுபான ஆலை உள்ளிட்ட பல்வேறு தொழில்களை விஜய் மல்லையா நடத்தி வந்தார். இந்த நிலையில், பாரத ஸ்டேட் வங்கி உள்பட 17 கடன்தாரர்களிடம் கடந்த 2010-ஆம் ஆண்டு ரூ.6,900 கோடியை கிங்ஃபிஷர் நிறுவனம் கடனாகப் பெற்றது. அதனையடுத்து, தொழில் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறி கிங்ஃபிஷர் நிறுவனம் தனது விமானச் சேவைகளை கடந்த 2013-ஆம் ஆண்டில் நிறுத்தியது. மேலும், வங்கிகளிடம் பெற்ற கடனையும் அந்நிறுவனம் திருப்பிச் செலுத்தவில்லை.

king fisher

இதனைத் தொடர்ந்து, விஜய் மல்லையா மற்றும் அவரது கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம், அதன் தாய் நிறுவனமான யுனைடெட் ப்ரீவரீஸ் குழுமம் ஆகியவற்றை ‘வேண்டுமென்றே பணத்தை திருப்பிச் செலுத்தத் தவறிய மோசடியாளர்கள்’ என்ற பட்டியலின் கீழ் இணைத்து எஸ்பிஐ நிறுவனம் அறிவித்தது.

இந்த வழக்கின் ஒருபகுதியாக, மல்லையாவுக்கு சொந்தமான யுனைடெட் ப்ரீவரீஸ் நிறுவனத்தின் 74 லட்சத்துக்கும் அதிகமான பங்குகள் முடக்கப்பட்டன. கிங்ஃபிஷர் நிறுவனத்திற்காக யெஸ் வங்கியில் அடமானம் வைத்து விஜய்மல்லையா கடன் பெற்றிருந்த அந்த பங்குகளை கடன் மீட்பு தீர்ப்பாயத்திடம் ஒப்படைக்கும்படி யெஸ் வங்கிக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, ஒப்படைக்கப்பட்ட அந்த பங்குகள் ரூ.1008 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அமலாகத்துறை தெரிவித்துள்ளது.

yes bank

முன்னதாக, இந்திய வங்கிகள் பலவற்றிலும் ரூ.9 ஆயிரம் கோடிக்கும் மேல் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாத வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையா நாட்டை விட்டு தப்பிச் சென்றார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் லண்டனில் வசித்து வரும் அவரை, இந்தியா கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வந்த நிலையில், விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது.ஆனால், அதனை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்துள்ளதால் அவரை நாடு கடத்துவதில் இழுபறி நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க

ரஜினியின் ஆஸ்தான இயக்குனர் மருத்துவமனையில் அனுமதி