வாராக் கடன் அதிகரிக்க காரணம் என்ன? பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசு கிடுக்குப்பிடி….

 

வாராக் கடன் அதிகரிக்க காரணம் என்ன? பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசு கிடுக்குப்பிடி….

கடந்த 5 ஆண்டுகளில் வாராக் கடன் அதிகரித்தற்கான காரணத்தை கண்டுபிடிக்கும்படி பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

வங்கிகளில் கடனை வாங்கியவர்கள் அதனை குறிப்பிட்ட காலத்துக்குள் கட்ட தவறுவதால் வாராக் கடன் ஏற்படுகிறது. பலருக்கு உண்மையான நெருக்கடி சூழ்நிலையால் கடனை திரும்ப செலுத்த முடியாமல் போய் விடுகிறது. அதேசமயம் சிலர் நல்ல வசதி வாய்ப்புகள் இருந்தும் வேண்டும் என்றே வங்கிகளில் வாங்கிய பல ஆயிரம் கோடி கடனை திரும்ப செலுத்தாமல் உள்ளனர். தற்போது வங்கிகளுக்கு கடன் வாராக் கடன் பெரும் சுமையாக உருவெடுத்துள்ளது.

வாராக்கடன்

வாராக் கடனை வசூலிக்க வங்கிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஆனால் விஜய்மல்லையா, நீரவ் மோடி போன்ற மோசடி பேர்வழிகள் நாட்டை விட்டு எஸ்கேப் ஆகிவிடுகின்றனர். இதனால் அவர்களிடமிருந்து கடனை வசூலிப்பது வங்கிகளுக்கு பெரும் பாடாக உள்ளது. இந்நிலையில், மத்தியில் புதிய நிதியமைச்சராக பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமன் வாராக் கடன் விவகாரத்தை தற்போது கையில் எடுத்துள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளில் வாராக் கடன் அதிகரித்தற்கான காரணத்தை கண்டுபிடிப்பது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் பொதுத்துறை வங்கிகளுடன் விரிவான ஆய்வை தொடங்கியுள்ளது. கல்வி கடன், அனைவருக்கும் வீடு, ஜல் சக்தி உள்ளிட்ட தேசிய முன்னுரிமைக்காக வங்கிகள் கடன் ஒதுக்குவதை தவிர்த்து, வாராக் கடன் அதிகரித்தற்கான இதர காரணங்களை கண்டுபிடிக்கும்படி பொதுத்துறை வங்கிகளுக்கு நிதியமைச்சக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கடன்

மேலும், கடந்த 5 ஆண்டுகளில் வங்கிகள் வழங்கும் கடன் குறைந்தது. தொழில்துறை வளர்ச்சி சரிவுக்கு அத்துறைக்கான கடன் குறைந்ததுதான் காரணமா? அப்படியென்றால் 2014-15ம் நிதியாண்டில் 2.8 சதவீதம் மட்டுமே  வளர்ச்சி கண்டு இருந்த தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி, 2017-18ம் நிதியாண்டில் ஏன் 4.6 சதவீதம் வளர்ச்சி கண்டு இருந்தது என்பதையும் நிதியமைச்சகம் தெரிந்து கொள்ள விரும்புகிறது. 

2014 ஏப்ரல் முதல் 2019 மார்ச் வரையிலான காலத்தில் கடன் விண்ணப்பங்கள் குறைந்ததற்கு காரணம் மற்றும் எத்தனை கடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டன மற்றும் அதில் நிராகரிக்கப்பட்டது எவ்வளவு போன்ற விவரங்களை அளிக்கும்படி பொதுத்துறை வங்கிகளுக்கு நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விரிவான ஆய்வின் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகள் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கும் வழி செய்யும் என அதிகாரிகள் கூறினர்.