வாரத்தின் முதல் வர்த்தக தினத்தில் சரிவு கண்ட பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 248 புள்ளிகள் வீழ்ச்சி…

 

வாரத்தின் முதல் வர்த்தக தினத்தில் சரிவு கண்ட பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 248 புள்ளிகள் வீழ்ச்சி…

வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 248 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

அமெரிக்காவில் அந்நாட்டு பெடரல் வங்கியின் 2 நாள் கூட்டம் இன்று தொடங்குகிறது. இந்த ஆண்டில் தொடர்ந்து 3 முறை வட்டி விகிதத்தை குறைத்த பெடரல் வங்கி இந்த முறை வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் செய்யாது என பல்வேறு தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர். பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் கவனம் தற்போது இந்த கூட்டத்தின் மீது திரும்பியுள்ளது. இது தவிர நம் நாட்டில் வாகன விற்பனை இந்த மாதமும் சரிவை சந்தித்தது. இது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் மோசமாக இருந்தது.

அமெரிக்க பெடரல் வங்கி அலுவலகம்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் நிறுவன பங்குகளில், பஜாஜ் பைனான்ஸ், இந்துஸ்தான் யூனிலீவர், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, எச்.டி.எப்.சி. வங்கி மற்றும் பஜாஜ் ஆட்டோ உள்பட 9 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. யெஸ் பேங்க், பவர்கிரிட், இண்டஸ்இந்த் வங்கி, என்.டி.பி.சி., ஐ.டி.சி., ஹீரோமோட்டோகார்ப் மற்றும் டி.சி.எஸ். உள்பட 21 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

இந்துஸ்தான் யூனிலீவர்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 811 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,723 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 171 நிறுவனங்களின் பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.150.48 லட்சம் கோடியாக குறைந்தது.

யெஸ் பேங்க்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 247.55  புள்ளிகள் குறைந்து 40,239.88 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 80.70 புள்ளிகள் வீழ்ந்து 11,856.80 புள்ளிகளில் முடிவுற்றது.