வாட்ஸ்அப்பில் கொரோனா வதந்தி பரப்பிய 3 நபர்கள் குடியாத்தத்தில் கைது

 

வாட்ஸ்அப்பில் கொரோனா வதந்தி பரப்பிய 3 நபர்கள் குடியாத்தத்தில் கைது

இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்பிய 3 நபர்கள் குடியாத்தத்தில் கைது செய்யப்பட்டனர்.

குடியாத்தம்: இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்பிய 3 நபர்கள் குடியாத்தத்தில் கைது செய்யப்பட்டனர்.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். இந்த நிலையில், குடியாத்தத்தில் மர்ம நபர்கள் சிலர் இரண்டு பேரின் புகைப்படங்களை தனித்தனியாக வைத்து பிரேக்கிங் நியூஸ் போல எடிட் செய்துள்ளனர். புகைப்படத்தில் உள்ள இரண்டு பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கில் மர்ம நபர்கள் வீடியோவை பகிர்ந்தனர்.

ttn

அந்த வீடியோவில் காணப்பட்ட இரு நபர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அத்துடன் குடியாத்தம் அரசு மருத்துவமனை சார்பிலும் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், தொழில்நுட்ப வல்லுநர்கள் துணை கொண்டு இவ்வாறு போலியாக வீடியோ செய்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் குடியாத்தம் நெல்லூர் பேட்டை சிவகாமி அம்மன் தெருவை சேர்ந்த கல்லூரி மாணவன் விஜயன் (19), ராஜா கோவில் கிராமத்தை சேர்ந்த செல்போன் சர்வீஸ் கடை வைத்துள்ள சுகுமார் (19), செதுக்கரை பச்சையம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் சுகுமார் (22) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 3 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதில் விஜயன் என்பவர் வாட்ஸ்அப் வீடியோவில் இருந்த பாதிக்கப்பட்ட ஒருவரின் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பேரும் விளையாட்டாக இதுபோன்ற வீடியோவை செய்தததாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் வீணாக வதந்தி பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.