வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை டெலிவரி செய்வதில் சிக்கல்…. தற்காலிகமாக கடையை சாத்திய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள்…

 

வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை டெலிவரி செய்வதில் சிக்கல்…. தற்காலிகமாக கடையை சாத்திய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள்…

நாடு தழுவிய முடக்கத்தால், பிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் தங்களது குடோன்களிலிருந்து சரக்குகளை எடுத்து வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்வதில் சிக்கல் எழுந்ததால் நேற்று தற்காலிகமாக வர்த்தகத்தை நிறுத்தி வைத்தன.

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. மத்திய அரசு வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதேசமயம் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிர் பலியும் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மக்கள் ஊரடங்குக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். அது வெற்றிகரமாக நிறைவடைந்தது.

பிளிப்கார்ட்

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முதல் 21 நாட்களுக்கு நாடு தழுவிய முடக்கத்தை அறிவித்தார். இதனையடுத்து பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக கடைகளுக்கு படை எடுத்தனர். மேலும் பலர் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஆர்டர் செய்தனர். ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் குவிந்தன. ஆனால் முடக்கம் காரணமாக ஆம்புலன்ஸ் மற்றும் அத்தியாவசிய சரக்குகள் கொண்டு செல்லும் வாகனங்கள் மட்டுமே சாலைகளில் அனுமதிக்கப்படுகிறது. இதனால் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களால் குடோன்களிலிருந்து வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை டெலிவரி செய்வதில் இடர்பாடு ஏற்பட்டது.

அமேசான்

இதனையடுத்து பிளிப்கார்ட் நிறுவனம் நேற்று தற்காலிகமாக தனது சேவைகளை நிறுத்தியது. மேலும் ஆர்டர்களை தற்காலிகமாக கேன்சல் செய்தது. அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், முடக்க நேரத்தில் செயல்படுவதற்கான சாத்திய கூறுகளை மதிப்பீடு செய்கிறோம். எங்களது டெலிவரி பணியாளர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்கிறோம். முடக்கம் காரணமாக எங்களது வாடிக்கையாளர்கள் வீட்டின் உள்ளே இருக்கின்றனர் அவர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக மாநில அரசுகள் மற்றும் காவல் துறை அதிகாரிகளின் ஆதரவு கேட்கிறோம் என தெரிவித்தார். அமேசான் இந்தியா நிறுவனமும் நேற்று தனது வர்த்தக தளத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.