வாஜ்பாய் திட்டத்துக்கு உயிர் கொடுக்கும் மோடி அரசு! கலக்கத்தில் ரயில்வே வாரிய பணியாளர்கள்

 

வாஜ்பாய் திட்டத்துக்கு உயிர் கொடுக்கும் மோடி அரசு! கலக்கத்தில் ரயில்வே வாரிய பணியாளர்கள்

ரயில்வே வாரியத்தை சீரமைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக வாரியத்தில் தேவையான அளவு பணியாளர்களை மட்டுமே வைத்து கொள்ள ரயில்வே முடிவு செய்துள்ளது.

ரயில்வேயின் அதிகபட்ச அதிகார மற்றும் முடிவுகளை எடுக்கும் அமைப்பாக ரயில்வே வாரியம் உள்ளது. ரயில்வே வாரியத்தில் தேவைக்கும் அதிகமாக அதிகாரிகள் இருப்பதாக கூறப்படுகிறது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்திலேயே (2000ல்) ரயில்வே வாரியத்தை சீரமைக்க வேண்டும் என்ற திட்டம் முன்வைக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் சுணக்கம் ஏற்பட்டது.

பியூஸ் கோயல்

இந்நிலையில், ரயில்வே வாரியத்தை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக, 2015ல் பிபெக் டெப்ராய் தலைமையிலான குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், ரயில்வேயின் மையப்படுத்தப்படட கட்டமைப்பும், துறைமயமாக்கலும் ரயில்வேயின் பணி கலாச்சாரத்தை பாதிக்கிறது என கூறப்பட்டு இருந்தது. இந்நிலையில் ரயில்வே வாரியத்தில் தேவையான அளவு மட்டுமே பணியாளர்களை வைத்து கொள்ள ரயில்வே முடிவு செய்துள்ளது.

வி.கே. யாதவ்

தற்போது ரயில்வே வாரியத்தில் 200 பணியாளர்கள் உள்ளனர். அதனை 150ஆக குறைக்கும் வகையில் 50 பணியாளர்களை ரயில்வே மண்டலங்களுக்கு இடமாற்றம் செய்ய ரயில்வே முடிவு செய்துள்ளது. இது குறித்து ரயில்வேயின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த திட்டம் நீண்டகாலமாக நிலுவையில் இருந்தது. அதேபோல் வாரியத்தில் ஒரே பணியை பலர் செய்கிறார்கள் மற்றும் திறனை அதிகரிக்க மண்டலங்களுக்கு மூத்த அதிகாரிகள் தேவைப்படுகிறார்கள். இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார். ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலின் 100 நாள் பட்டியலிலும், தற்போதைய ரயில்வே வாரிய தலைவர் வி.கே. யாதவின்  முன்னுரிமை விஷயங்களிலும் ரயில்வே  வாரியம் சீரமைப்பு நடவடிக்கை இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.