வாங்க பிரச்சினையை உட்கார்ந்து பேசலாம்! இந்தியா-அமெரிக்கா அதிகாரிகள் நாளை பேச்சு வார்த்தை!

 

வாங்க பிரச்சினையை உட்கார்ந்து பேசலாம்! இந்தியா-அமெரிக்கா அதிகாரிகள் நாளை பேச்சு வார்த்தை!

இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை நாளை மீண்டும் தொடங்குகிறது. இதனால் இருநாடுகளுக்கு இடையிலான இறக்குமதி வரி உயர்வு பிரச்சினை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவுக்குள் வரும் குறைந்த விலை இறக்குமதியாகும் பொருட்களால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுகின்றனர் என சமீபகாலமாக டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். அதன் தொடர்ச்சியாக சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீதான வரியை அமெரிக்கா உயர்த்தியது. இதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீது வரியை உயர்த்தியது. இதனால் சர்வதேச அளவில் வர்த்தக போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.

இறக்குமதி

இதற்கிடையே, இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் உருக்கு மற்றும் அலுமினிய பொருட்கள் மீதான வரியை அமெரிக்கா உயர்த்தியது. இதற்கு பதிலடியாக இந்தியாவும் அங்கிருந்து இறக்குமதியாகும் பாதாம் உள்ளிட்ட பொருட்கள் மீதான வரியை உயர்த்தியது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது என டிரம்ப் கூறினார். இந்நிலையில், அண்மையில் ஜப்பானில் ஜி20 நாடுகளின் உச்சிமாநாடு நடந்தது. அப்போது, அமெரிக்க அதிபர் டிரம்பும், சீன அதிபர் ஜின் பிங்கும் சந்தித்து பேசினர். இதனையடுத்து அவர்கள் மீண்டும் வர்த்தக பேச்சு வார்த்தை தொடரும் என்று அறிவித்தன.

ஸ்டீல் பொருட்கள்

அந்த உச்சிமாநாட்டின் போது மோடியையும் டிரம்ப் சந்தித்து பேசினார். இதனையடுத்து அமெரிக்கா-இந்தியா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை மீண்டும் தொடரும் என டிரம்ப் கூறினார். இதன்படி, நாளை இந்தியாவில் வர்த்தக பேச்சுவார்த்தையை இந்திய-அமெரிக்க அதிகாரிகள் தொடங்க உள்ளனர். இதனால் இருநாடுகளுக்கும் இடையிலான இறக்குமதி வரி உயர்வு பிரச்சினை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.