வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு: அம்பலப்படுத்திய நபர் மீது தேர்தல் ஆணையம் புகார்

 

வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு: அம்பலப்படுத்திய நபர் மீது தேர்தல் ஆணையம் புகார்

வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யப்பட்டது என்று கூறிய நிபுணர் சையத் சுஜா மீது நடவடிக்கை கோரி டெல்லி காவல்துறையிடம் தேர்தல் ஆணையம் புகார் கொடுத்துள்ளது. 

புதுடெல்லி: வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யப்பட்டது என்று கூறிய நிபுணர் சையத் சுஜா மீது நடவடிக்கை கோரி டெல்லி காவல்துறையிடம் தேர்தல் ஆணையம் புகார் கொடுத்துள்ளது. 

இந்தியாவில் வாக்குச்சீட்டு தேர்தல் முறை அடியோடு ஒழிக்கப்பட்டு, மின்னணு வாக்குப்பதிவு முறை நடைமுறையில் இருந்து வருகிறது. ஆரம்ப காலத்தில் முற்போக்கு திட்டமாக பார்க்கப்பட்ட இத்திட்டத்தில், சில தொழில்நுட்ப குளறுபடிகள் இருப்பது பின்னர் தான் தெரியவந்தது. 

ec

இருப்பினும் இந்தியா முழுவதும் இத்திட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டதால், அவ்வப்போது ஏற்படக்கூடிய கோளாறுகளை சீர் செய்து தேர்தல் ஆணையம் தேர்தல்களை நடத்தி வருகிறது. ஆனால், அதற்கெல்லாம் மேலாக, இந்த இயந்திரத்தை ஹேக் செய்து, ஒரு வேட்பாளருக்கு பதிவான வாக்கை, மற்றொருவருக்கு மாற்ற முடியும் என அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகத் தொடங்கியது.

ஆனால், அதெல்லாம் ஏமாற்று வேலை என்றும், தேர்தல் ஆணையம் அனுமதிக்கும் இயந்திரங்களை ஹேக் செய்ய முடியாது எனவும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்திருந்தது.

இதற்கிடையே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தயாரிக்கும் குழுவில் இருந்த அமெரிக்க வாழ் இந்தியர் சையத் சுஜா, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும் என நேற்று செய்முறை விளக்கம் கொடுத்திருந்தார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை உருவாக்கிய நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திர நிபுணர் சையத் சுஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லி போலீசாரிடம் தேர்தல் ஆணையம் இன்று புகார் கொடுத்துள்ளது.