வாகன தயாரிப்பு நிறுவனங்களை ஏமாற்றிய நவம்பர்… மீண்டும் சரிவை சந்தித்த விற்பனை

 

வாகன தயாரிப்பு நிறுவனங்களை ஏமாற்றிய நவம்பர்… மீண்டும் சரிவை சந்தித்த விற்பனை

கடந்த நவம்பர் மாதத்தில் ஒட்டு மொத்த அளவில் வாகன விற்பனை சரிவை சந்தித்துள்ளது. வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு கடந்த மாசம் ஒரு சோகமான மாதமாக அமைந்து விட்டது.

தொடர்ந்து விற்பனையில் சரிவை மட்டுமே சந்தித்து வந்த வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் சிறிது சந்தோஷத்தை கொடுத்தது. பண்டிகை காலம் என்பதால் அந்த மாதத்தில் வாகன விற்பனை ஏற்றம் கண்டது. இந்நிலையில் கடந்த நவம்பரில் வாகன விற்பனை மீண்டும் சரிவை சந்தித்துள்ளது. இந்திய வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 

வாகன தயாரிப்பு நிறுவனங்கள்

2019 நவம்பர் மாதத்தில் ஸ்கூட்டர்,பைக் உள்ளிட்ட இருசக்கர வாகனங்கள் விற்பனை 14.27 சதவீதம் குறைந்து 14.10 லட்சமாக சரிவடைந்துள்ளது. 2018 நவம்பரில் மொத்தம் 16.45 லட்சம் இருசக்கர வாகனங்கள் விற்பனையாகி இருந்தது. கடந்த நவம்பரில் மோட்டார் சைக்கிள் விற்பனை 14.87 சதவீதம் குறைந்து 8.93 லட்சமாக சரிவடைந்தது. ஸ்கூட்டர் விற்பனை 11.83 சதவீதம் குறைந்து 4.59 லட்சமாக சரிவடைந்தது.

கார்கள்

2019 நவம்பரில் வர்த்தக வாகனங்கள் விற்பனை 14.98 சதவீதம் வீழ்ந்து 61,907ஆக குறைந்துள்ளது. பயணிகள் வாகனங்கள் விற்பனை 0.84 சதவீதம் குறைந்து 2.63 லட்சம் வாகனங்களாக வீழ்ச்சி கண்டுள்ளது. உள்நாட்டில் கார் விற்பனை 10.83 சதவீதம் குறைந்து 1.60 லட்சமாக குறைந்துள்ளது. 2018 நவம்பரில் 1.79 லட்சம் கார்கள் விற்பனையாகி இருந்தது. வேன் விற்பனை 34.32 சதவீதமாக குறைந்து 10,728 வாகனங்களாக குறைந்துள்ளது.