‘வழக்கை எப்படி நடத்தக்கூடாது என்பதற்கு ஸ்டெர்லைட் வழக்கே உதாரணம்!’ – ஸ்டாலின் காட்டம்

 

‘வழக்கை எப்படி நடத்தக்கூடாது என்பதற்கு ஸ்டெர்லைட் வழக்கே உதாரணம்!’ – ஸ்டாலின் காட்டம்

ஸ்டெர்லைட் தொடர்பான சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பதையடுத்து, தமிழக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை: ஸ்டெர்லைட் தொடர்பான சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பதையடுத்து, தமிழக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது போலீசார் நடத்திய தடியடி, துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானதால் அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தது. மேலும் ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்டது.

பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்தும், பசுமை தீர்ப்பாய விசாரணைக்கு தடை கோரியும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. ஆனால், தமிழக அரசின் மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மீண்டும் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

இதற்கு தமிழக அரசு தான் முழு பொறுப்பேற்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தன் ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் ஸ்டெர்லைட் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மக்கள் நலன்சார்ந்த வழக்கை, எப்படி நடத்தக்கூடாது என்பதற்கு இதுவே உதாரணம்!

‘அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி கொள்கை முடிவெடுக்க வேண்டுமென’ கோரிக்கை வைத்தபோது விமர்சித்த முதல்வரும்-அமைச்சர்களுமே இத்தோல்விக்கு பொறுப்பு!” என பதிவிட்டுள்ளார்.