வலுக்கும் ஓவிய கண்காட்சி சர்ச்சை: மன்னிப்பு கேட்ட லயோலா கல்லூரி!

 

வலுக்கும் ஓவிய கண்காட்சி சர்ச்சை: மன்னிப்பு கேட்ட லயோலா கல்லூரி!

சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து மதத்தினரை புண்படுத்தும் வகையில் ஓவியங்கள் இடம்பெற்றிருந்ததாகச் சர்ச்சை கிளம்பிய நிலையில் கல்லூரி நிர்வாகம் சார்பில் மன்னிப்பு கோரப்பட்டுள்ளது.

சென்னை: சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து மதத்தினரை புண்படுத்தும் வகையில் ஓவியங்கள் இடம்பெற்றிருந்ததாகச் சர்ச்சை கிளம்பிய நிலையில் கல்லூரி நிர்வாகம் சார்பில் மன்னிப்பு கோரப்பட்டுள்ளது.

சென்னை லயோலா கல்லூரியின் மாணவர் அரவணைப்பு மையமும், மாற்று ஊடக மையமும் இணைந்து வீதி விருது விழாவை நடத்தியுள்ளது. ஜனவரி 19, 20 ஆகிய இரண்டு நாட்கள் இந்த விழா நடைபெற்றது. லயோலா கல்லூரியில் நடந்த இந்த விழாவைக் கல்லூரியின் கலை இலக்கியப் பிரிவு, தமிழ்நாடு அனைத்து நாட்டுப் புறக் கலைஞர்கள் அமைப்பு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், தன்னார்வ கலைஞர்கள் சங்கம் ஆகியோரும் இணைந்து நடத்தினர்.

இந்நிலையில் லயோலா கல்லூரியில் நடந்த ஓவியக் கண்காட்சி குறிப்பிட ஒரு மதத்தினரை காயப்படுத்துவது போல இருப்பதாக பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை செளந்திரராஜன், ஹெச்.ராஜா உள்ளிட்ட சிலர் கடுமையாக விமர்சித்திருந்தனர்.

இதையடுத்து லயோலா கல்லூரியின் கலை மற்றும் இலக்கிய மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள மன்னிப்புக் கடிதத்தில் கூறியிருப்பதாவது;-  ‘நாட்டின் பன்முகத் தன்மை மற்றும் பண்பாடுகளை சம அளவில் மதித்து நடக்கும் கல்லூரி, லயோலா கல்லூரி. சமூகத்தின் அமைதியைக் கெடுக்கும் எந்தவொரு செயலையும் கல்லூரி நிர்வாகம் ஊக்குவிக்காது. கடந்த 19 மற்றும் 20-ம் தேதிகளில் கல்லூரியில் நடைபெற்ற ‘வீதி விருது விழா’ நிகழ்வு தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதற்குக் கடுமையாக வருத்தம் தெரிவிக்கிறோம். எங்கள் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்ட ஓவியங்களை உடனடியாக நீக்கி உள்ளோம். வேதனைப்படுத்திய இவ்விவகாரத்துக்காக மன்னிப்பு கோருகிறோம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.