ரூ.18 ஆயிரம் கோடி மோசடி செய்து விட்டு 51 பேர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்- மத்திய அரசு தகவல்

 

ரூ.18 ஆயிரம் கோடி மோசடி செய்து விட்டு 51 பேர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்- மத்திய அரசு தகவல்

ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.18 ஆயிரம் கோடி மோசடியில் ஈடுபட்ட 51 பேர் வெளிநாட்டுக்கு தப்பியோடி விட்டதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்ற தொழிலதிபர்கள் வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடனை வாங்கி விட்டு திரும்ப செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றனர். விஜய்மல்லையா போன்றவர்களை தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் என அரசு அறிவித்தது. மேலும் அவர்களை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

அனுராக் சிங் தாகூர்

நாடாளுமன்ற மாநிலங்களவையில் தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் குறித்து உறுப்பினர்கள் கேள்வி கேட்டு இருந்தனர். அதற்கு மத்திய நிதி துறை இணையமைச்சர் அனுராக் சிங் தாகூர் எழுத்து மூலமாக பதில் அளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: மோசடிகளில் ஈடுபட்ட 51 பேர் வெளிநாட்டுக்கு தப்பியோடி உள்ளனர். அவர்கள் 66 வழக்குகளில் குற்றவாளிகள் என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளனர்.

சி.பி.ஐ.

சி.பி.ஐ. அறிக்கையின்படி, இந்த 66 வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மொத்தம் ரூ.17,947.11 கோடி (தோரயமாக) அளவுக்கு மோசடியில் ஈடுபட்டுள்ளனர். 6 பொருளாதார குற்றவாளிகள் சட்டத்துக்கு புறம்பான வழிமுறையில் வெளிநாட்டுக்கு தப்பியோடியதாக மத்திய மறைமுக வரிககள் வாரியம் மற்றும் கஸ்டம்ஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டம் 2018ன்கீழ் 10 தனிநபர்கள் மீது அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.