ரூ.165 கோடி கொடுத்த இந்தியா….. நன்றி தெரிவித்த ஐ.நா.

 

ரூ.165 கோடி கொடுத்த இந்தியா….. நன்றி தெரிவித்த ஐ.நா.

ஐ.நா.வின் பட்ஜெட்டுக்காக தனது பங்கான ரூ.165 கோடியை இந்தியா முழுமையாக செலுத்தி விட்டது. இதனையடுத்து இந்தியாவுக்கு ஐ.நா. நன்றி தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையில் மொத்தம் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ஒவ்வொரு நாடும் பட்ஜெட் போட்டு செயல்படுவது போல் ஐ.நா.வும் பட்ஜெட் போட்டுதான் இயங்கி வருகிறது. ஐ.நா. 2018-19ம் ஆண்டுக்கு 540 கோடி டாலர் அளவுக்கு பட்ஜெட்டை செயல்படுத்தி வருகிறது. இதில் அமைதி நடவடிக்கைக்கான பணம் சேராது. உறுப்பு நாடுகள் வழங்கும் தொகையை வைத்துதான் ஐ.நா. தனது பணியாளர்களுக்கு சம்பளம் உள்பட எல்லா செலவுகளையும் செய்கிறது. 

நிதி

2020 பிப்ரவரி 1ம் தேதிக்குள், உறுப்பு நாடுகள் ஐ.நா.வின் பட்ஜெட் மதிப்பீட்டில் தங்களது பங்கு பணத்தை செலுத்த வேண்டும். ஆனால் இதுவரை இந்தியா உள்பட 4 நாடுகள் மட்டுமே தங்களது பட்ஜெட் பங்கினை முழுமையாக செலுத்தி உள்ளன. 2020 ஜனவரி 10ம் தேதி நிலவரப்படி, ஐ.நா.வின் பட்ஜெட்டில் தனது  பங்களிப்பு தொகையான ரூ.165 கோடியை இந்தியா செலுத்திவிட்டது.

நன்றி

இதனையடுத்து, வழக்கமான பட்ஜெட் மதிப்பீட்டில் தனது பங்கினை செலுத்திய இந்தியாவுக்கு ஐ.நா. நன்றி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா.வின் பொதுசெயலாளர் அன்டோனியோ கட்டெரஸின் செய்தி தொடர்பாளர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஐ.நா.வின் பட்ஜெட் மதிப்பீட்டின்படி, தனது பங்கினை முழுமையாக செலுத்திய 4வது நாடு இந்தியா. அர்மேனியா, போர்ச்சுக்கல் மற்றும் உக்ரைனுக்கு மீண்டும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். மற்றும் இந்தியாவுக்கு புதிதாக நன்றி தெரிவித்து கொள்கிறோம் என தெரிவித்தார். அடுத்த மாதம் பணியாளர்களுக்கு சம்பளம் போட வழியில்லாத அளவுக்கு நிதி நிலைமை மோசமாக உள்ளதாகவும், உறுப்பு நாடுகள் தங்களது நிலுவை தொகையை விரைவாக செலுத்தும்படி கடந்த சில மாதங்களுக்கு முன் ஐ.நா. பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.