ரூ.1.17 லட்சம் கோடியை பறிகொடுத்த முதலீட்டாளர்கள்….சென்செக்ஸ் 202 புள்ளிகள் வீழ்ச்சி

 

ரூ.1.17 லட்சம் கோடியை பறிகொடுத்த முதலீட்டாளர்கள்….சென்செக்ஸ் 202 புள்ளிகள் வீழ்ச்சி

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் படுத்தது. சென்செக்ஸ் 202 புள்ளிகள் குறைந்தது.

சர்வதே முதலீட்டாளர்கள் சேவை நிறுவனமான மூடிஸ், 2020ம் ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து தனது மதிப்பீட்டை 5.4 சதவீதமாக குறைத்துள்ளது. சீனாவில் பரவி வரும் கொரோனாவைரஸால் குறுகிய கால அடிப்படையில் சர்வதேச பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் இன்று மோசமாக இருந்தது.

டைட்டன்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டைட்டன், நெஸ்லேஇந்தியா, டி.சி.எஸ்., டாடா ஸ்டீல், கோடக்மகிந்திரா வங்கி மற்றும் இன்போசிஸ் உள்பட 11 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. ஒ.என்.ஜி.சி., சன்பார்மா, என்.டி.பி.சி., பஜாஜ் ஆட்டோ மற்றும் எச்.டி.எப்.சி. நிறுவனம் உள்பட 19 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

ஓ.என்.ஜி.சி.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 822 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,729 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 165 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.157.38 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று ஒரே நாளில் பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ரூ.1.17 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 202.05 புள்ளிகள் இறங்கி 41,055.69 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 67.65 புள்ளிகள் குறைந்து 12,045.80 புள்ளிகளில் நிலைகொண்டது.