ரூ.1 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்….. சென்செக்ஸ் 202 புள்ளிகள் வீழ்ச்சி….

 

ரூ.1 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்….. சென்செக்ஸ் 202 புள்ளிகள் வீழ்ச்சி….

இன்றும் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் படுத்தது. சென்செக்ஸ் 202 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

கடந்த ஜனவரியில் மொத்த விலைபணவீக்கம் 3.1 சதவீதமாக உயர்ந்தது. தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையை மார்ச் 17ம் தேதிக்குள் செலுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது.

பார்தி ஏர்டெல்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பார்தி ஏர்டெல், எச்.சி.எல். டெக்னாலஜிஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்பட 8 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. இண்டஸ்இந்த் வங்கி, பவர்கிரிட், ஸ்டேட் வங்கி, ஹீரோமோட்டோகார்ப், மகிந்திரா அண்டு மகிந்திரா மற்றும் ஐ.டி.சி. உள்பட 22 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

இண்டஸ்இந்த் வங்கி

மும்பை பங்குச் சந்தையில் இன்று 914 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,619 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 176 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.158.55 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று ஒரே நாளில் மட்டும் பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ரூ.1.02 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 202.05 புள்ளிகள் குறைந்து 41,257.74 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 61.20 புள்ளிகள் சரிந்து 12,113.45 புள்ளிகளில் முடிவுற்றது.