ரிசர்வ் வங்கி வட்டியை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பால் ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 281 புள்ளிகள் உயர்ந்தது

 

ரிசர்வ் வங்கி வட்டியை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பால் ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 281 புள்ளிகள் உயர்ந்தது

ரிசர்வ் வங்கி வட்டியை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 281 புள்ளிகள் உயர்ந்தது

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு 3.21 சதவீதமாக உயர்ந்துள்ளது. இருப்பினும், இது ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவான 4 சதவீதத்தை காட்டிலும் குறைவாகும். இதனால் ரிசர்வ் வங்கி தனது அடுத்த நிதிக்கொள்கை ஆய்வு கூட்டத்தின் போது வட்டி விகிதத்தை குறைக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது தவிர அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக போர் பதற்றம் தணிந்தது. 

மும்பை பங்குச் சந்தை

பொருளாதார வளர்ச்சியை கருத்தில்  கொண்டு ஐரோப்பிய மைய வங்கி வலுவான நடவடிக்கை எடுத்தது. இதனால் ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. இது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம் கண்டது.

சென்செக்ஸ் கணக்கிட உதவும் நிறுவன பங்குகளில் வேதாந்தா, ஆக்சிஸ் வங்கி, மகிந்திரா அண்டு மகிந்திரா, இன்போசிஸ், டாடா மோட்டார்ஸ், மாருதி உள்பட 25 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பார்தி ஏர்டெல், சன்பார்மா மற்றும் ஐ.டி.சி. உள்பட 5 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

பங்கு வர்த்தகம்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,512 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 961 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. இருப்பினும் 165 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.142.41 லட்சம் கோடியாக உயர்ந்தது. நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்த போது நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.141.26 லட்சம் கோடியாக இருந்தது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 280.71 புள்ளிகள் உயர்ந்து 37,384.99 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 93.10 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,075.90 புள்ளிகளில் முடிவுற்றது.