ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசன விழா நாளை தொடங்குகிறது

 

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசன விழா நாளை தொடங்குகிறது

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசன விழா நாளை காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. 

ராமநாதபுரம் :

தமிழகத்தில் அமைந்துள்ள முதன்மையான பித்ரு தோஷ பரிகார ஸ்தலமாக விளங்குவது  ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் ஆகும் .

rameswaram

இக்கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்தாண்டிற்கான ஆருத்ரா தரிசன விழா நாளை காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.

நாளை காலை கோயிலின் 3-ம் பிரகாரத்தில் 1 லட்சம் ருத்ராட்சைகளால் ஆன மண்டபத்தில் வீற்றிருக்கும் நடராஜருக்கு காப்பு கட்டப்பட்டு சிறப்பு மகா தீபாராதனை பூஜைகள் நடைபெறுகின்றன.

அதனை தொடர்ந்து 15 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை மாணிக்கவாசகர் தங்ககேடயத்தில் நடராஜர் சன்னதியில் இருந்து புறப்பட்டு கோயிலின் 3-ம் பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

rameswaram

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 23 ஆம் தேதி அன்று ஆருத்ராதரிசன நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று அதிகாலை 3 மணியில் இருந்து 4.30 மணி வரை நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு பால்,பன்னீர்,திரவியம்,மாபொடி,மஞ்சள் பொடி உள்ளிட்ட பல பொருட்களால் சிறப்பு மகா அபிஷேகம் நடை பெறுகிறது.

அதனையடுத்து தொடர்ந்து நடராஜர் மற்றும் சிவகாமிஅம்பாளுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு மகா தீப ஆராதனை பூஜைகள் நடைபெறுகின்றன.

ஆருத்ரா திருவிழாவையொட்டி வருகிற 23ஆம் தேதி அன்று கோயில் நடை திறப்பில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அன்று அதிகாலை 2 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 2.30 மணியில் இருந்து 3.30 மணி வரை ஸ்படிகலிங்க தரிசனமும் நடைபெற்று அதிகாலை 5.15 மணிக்கு நடராஜர் சன்னதியில் ஆருத்ரா தரிசனம் நடை பெறும் எனவும் திருக்கோயில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் மங்கையர்க்கரசி தலைமையில்  திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.