ராஜஸ்தானில் மத்திய பிரதேசம் போன்ற நிலைமை இல்லை…… சச்சின் பைலட் நம்பிக்கை

 

ராஜஸ்தானில் மத்திய பிரதேசம் போன்ற நிலைமை இல்லை…… சச்சின் பைலட் நம்பிக்கை

மத்திய பிரதேசத்தில் ஆளும் கட்சியான காங்கிரசை சேர்ந்த 22 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனையடுத்து அம்மாநிலத்தில் முதல்வர் கமல் நாத் தலைமையிலான அரசு கவிழும் நிலையில் உள்ளது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா பின்னணியில் பா.ஜ.க. உள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானில் ஆட்சியை கைப்பற்ற அம்மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க பா.ஜ.க. மறைமுகமாக நடவடிக்கையில் இறங்கும் என செய்தி வெளியானது.

ம.பி. முதல்வர் கமல் நாத்

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தின் துணை முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவருமான சச்சின் பைலட் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், மத்திய பிரதேச அரசுக்கு முதல்வர் கமல் நாத் அடிக்கடி கூறுவது  போல் பெரும்பான்மை உள்ளது. சட்டப்பேரவையில்தான் பெரும்பான்மையை நிருபிப்பது மரபு. நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் முடிவு நிலுவையில் இருப்பதால் நாம் அதிகம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆளும் காங்கிரஸ் அரசுக்கு சாதமாக இருக்கும் என நம்புகிறேன் என தெரிவித்தார்.

பா.ஜ.க.

பேட்டியின் போது, பா.ஜ.க. அல்லது வெளிப்புற சக்திகள் வேறுஏதாவது ராஜஸ்தான் அரசை கவிழ்க்க வாய்ப்புள்ளதாக என்ற செய்தியாளரின் கேள்விக்கு, நான் அப்படி நினைக்கவில்லை. எண்ணிக்கை (எம்.எல்.ஏ.க்கள்)  ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக இருப்பதாக நினைக்கிறேன். ராஜஸ்தானில் அதுபோன்ற (மத்திய பிரதேசம் நிகழ்வுகள்) முயற்சிகள் எதுவும் நான் பார்க்கவில்லை என சச்சின் பைலட் தெரிவித்தார்.